உலகம்

ரயில் வடிவில் வகுப்பறை : அசத்தும் மதுரை பாடசாலை…!

மதுரையில் செயல்படும் பாடசாலை ஒன்று, ரயில் பெட்டி போன்று வடிவமைக்கப்பட்டிருப்பது மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ரயில் நிலையம் அருகில் உள்ள மீனாட்சி பஜாரில் செயல்பட்டு வருகிறது மதுரா காலேஜ் மேல்நிலை பாடசாலை.

இதே வளாகத்திற்குள், அரசு உதவி பெறும்  தொடக்கப்பள்ளியும் உள்ளது. இதன் வகுப்பறைகள், ரயில் பெட்டியை போன்று வடிவமைக்கப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.

அத்துடன், வகுப்பறையின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அனைத்தும் நிஜ ரயிலில் உள்ளதைப் போன்றே அமைக்கப்பட்டுள்ளது. இதன் முன் பக்கத்தில், மதுரை டூ சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் என எழுதப்பட்டுள்ளது.

“இதுவரை, பள்ளிக்கு அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் ரயில்களை மட்டுமே பார்த்து ரசித்த நாங்கள், தற்போது நிஜ ரயில் உட்கார்ந்து பாடம் படிப்பது போன்று உணர்கிறோம்” என மாணவ – மாணவியர் கூறுகின்றனர்.

பாடசாலைக்குச் செல்ல அடம்பிடிக்கும் பிள்ளைகள் மத்தியில், அவர்களை வசீகரிக்கும் வகையில் பள்ளி நிர்வாகம் செய்துள்ள இந்த புதிய முயற்சிக்கு வரவேற்பும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

Hot Topics

Related Articles