உலகம்

டிவி வெளிச்சத்தில் தூங்கினால் பெண்களின் எடை அதிகரிக்கும்..!

‘டிவியை இயக்கத்தில் வைத்துவிட்டு அதன் வெளிச்சத்தில் தூங்கினால், பெண்களின் உடல் எடை அதிகரிக்கும்’ என்று அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள தேசிய சுகாதார நிறுவனங்கள், பெண்களின் உடல் நலம், மார்பக புற்று நோய் மற்றும் இதர நோய்கள் குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வுக்கு, 35 முதல் 74 வயது வரையிலான 43,722 பெண்கள் உட்படுத்தப்பட்டனர்.

அவர்களிடம், ‘இரவு நேரத்தில் விளக்கு வெளிச்சத்தில் தூங்குவீர்களா..?, சிறிய அளவிலான விளக்கு வெளிச்சத்தில் தூங்குவீர்களா..?, டிவியை இயங்க வைத்து விட்டு தூங்குவீர்களா..? அல்லது இருட்டில் தூங்குவீர்களா..?’ என்ற தலைப்புகளில் கேள்விகள் கேட்கப்பட்டன.

அதில், இருட்டு அறையில் தூங்கும் பெண்களைவிட, டிவியை இயங்க வைத்து விட்டு அதன் வெளிச்சத்தில் தூங்குவதாக கூறிய பெண்கள் அதிக உடல் எடையுடன் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், “தொலைக்காட்சியில் இருந்து வெளியாகும் செயற்கை வெளிச்சம் உடலில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தி, மெலாடோனின் என்ற ஹார்மோன் சுரப்பதை கட்டுப்படுத்துகிறது. இதனால், தூக்கம் குறைந்து உடலில் கொழுப்பு அதிகரிக்கிறது. இதன் காரணமாக, உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு, பலவித நோய்கள் உருவாக வாய்ப்பு உள்ளது” என தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு கட்டுரை, ‘ஜமா இண்டர்நே‌ஷனல் மெடிசன்’ என்ற இதழில் வெளியாகியுள்ளது.

Hot Topics

Related Articles