உலகம்

இயக்குநராகிறார் நடிகர் விவேக்

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகனாக வலம் வரும் நடிகர் விவேக் விரைவில் சமூக அக்கறையுள்ள நகைச்சுவைப் படமொன்றை இயக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வெள்ளை பூக்கள். விவேக் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் ஏப்ரல் 19 ஆம் திகதி திரைக்கு வருகிறது.

இதேவேளை, விவேக் இளங்கோவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வெள்ளை பூக்கள் படத்தில் நடிகர் விவேக் வித்தியாசமான பொலிஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் விவேக் அளித்த பேட்டியில் கூறியதாவது,

அடுத்த திட்டம்?

விரைவில் ஒரு படம் இயக்க போகிறேன். விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நகைச்சுவை படமாக இருக்கும். முன்னணி கதாநாயகர் ஒருவரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளேன்.

சமீபகாலமாக சினிமாவில் நகைச்சுவை குறைந்தது போல் தெரிகிறதே?

நான், வடிவேலு போன்றோர் நடிக்கும் வரை படங்கள் இரண்டரை மணி நேரத்தை தாண்டி ஓடும். எனவே எங்களுக்கு நகைச்சுவைக்காக தனி டிராக் கிடைக்கும்.

ஆனால் இப்போது 2 மணி நேரம் ஒரு சினிமாவில் ரசிகர்களை அமர வைப்பதே சவாலாக இருப்பதால் அதற்கும் குறைவான படங்களே உருவாகின்றன. எனவே படத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கிடைப்பதில்லை என்றார்.

வெள்ளைப்பூக்கள் டிரைலர் பார்க்கும்போது சீரியசான பொலிஸ் வேடம் போல தெரிகிறதே?

அமெரிக்காவை சேர்ந்த பொறியியலாளரான விவேக் இளங்கோவன் இந்த படத்துக்காக என்னை அணுகினார். முழு கதையையும் படித்து பார்த்த நான் இந்த கதைக்கு சத்யராஜ் போன்ற ஒருவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று அவரிடம் கூறிவிட்டேன்.

ஆனால் அவரோ இந்த வேடத்தில் இதுவரை பார்த்திராத ஒருவர் நடித்தால் தான் சரியாக இருக்கும் என்று சொல்லி என்னை சம்மதிக்க வைத்தார். ஓய்வுபெற்ற டிஐஜி வேடம். முதன்முதலாக இப்படி ஒரு வேடத்தில் நடிக்கிறேன்.

உங்கள் திரையுலக நண்பர்கள் என்ன சொன்னார்கள்?

ஏ.ஆர்.ரஹ்மானிடம் இந்த டீசரை காண்பித்ததும் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவரை இசையமைக்க வைக்கலாம் என்று திட்டமிட்டு காத்திருந்தோம். ஆனால் அவர் பல பணிகளில் பிசியாக இருப்பதால் அது நடக்காமல் போய்விட்டது.

மீடூ இயக்கம் பற்றி?

பெண்களிடம் நிறைய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. நமது கலாசாரத்தின்படி எல்லா பெண்களையுமே தாயாக பார்க்கும்படி தான் வளர்ந்தோம். ஆனால் சமீபகாலத்தில் பெண்களுக்கு பாலியல் ரீதியிலான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. காரணம் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் ஆபாச படங்கள் தான். 25 சதவீதம் சினிமாவுக்கும் இதில் பங்கு உண்டு. என்றாலும் 75 சதவீதம் இணையத்தில் கிடைக்கும் ஆபாச படங்கள் தான் காரணம் என்றார்.

Hot Topics

Related Articles