உலகம்

வேலை வாங்கித்தருவதாக பல கோடி மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரம் தொடர்பாக, அ.தி.மு.க. பிரமுகர் வீட்டு முன்பு பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்தியதால், உடுமலையில் பரபரப்பு ஏற்பட்டது.


சென்னையில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் நிறுவனம், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி விளம்பரம் செய்தது. இதை நம்பி, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் அந்த நிறுவனத்தின் உரிமையாளரான விநாயக் என்பவரிடம் பணம் செலுத்தினர். ஆனால் அவர், பணம் செலுத்தியவர்களுக்கு வேலை வாங்கித் தராமல் மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, வேலைக்காக பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்த வேலூரைச் சேர்ந்த சதீஷ், பிரசாந்த், அவரது தாயார் பரஞ்சோதி ஆகியோர் நேற்று முன்தினம் (31 ஆம் திகதி) காலை 11 மணி அளவில் விநாயக்கின் சொந்த ஊரான திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த உடுக்கம் பாளையத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள், விநாயக் வீட்டு முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, சதீஷ் மற்றும் பிரசாந்த் கூறியதாவது; “சென்னை மேற்கு மாம்பலத்தில் செயல்பட்டுவந்த ஒரு நிறுவனம் வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக விளம்பரம் செய்தது. அந்த நிறுவனத்தை அணுகி விசாரித்தோம். அப்போது, 4.5 லட்சம் ரூபாய் கொடுத்தால் ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித்தருவதாக நிறுவன உரிமையாளர் விநாயக் தெரிவித்தார். அதை நம்பி, நாங்கள் ஆளுக்கு 4.5 லட்சம் ரூபாயை அவரிடம் கொடுத்தோம். இதுபோல் பலரும் பணம் செலுத்தினர்.

இந்நிலையில், சிலரை மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா அழைத்துச் சென்று ஒரு அறையில் அடைத்து வைத்தனர். எங்களுக்கு சந்தேகம் எழுந்ததால் இந்திய தூதரகத்தை அணுகுவதாக கூறினோம். இதையடுத்து எங்களை மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்துவிட்டனர். நாங்கள் கொடுத்த பணத்தை திருப்பித்தருமாறு கேட்டோம். ஆனால் விநாயக், பணம் கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.

எங்களைப்போல் 60க்கும் அதிகமானோரிடம் பல கோடி ரூபாயை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. அதன்பின்னர் நிறுவனத்தை பூட்டிவிட்டு விநாயக் தலைமறைவாகி விட்டார். விநாயக், சொந்த ஊரான உடுக்கம்பாளையத்தில் பெற்றோருடன் இருப்பதாக தகவல் கிடைத்ததால் இங்கு வந்தோம். அதற்குள் விநாயக் தலைமறைவாகிவிட்டார்.

அவரது ஊரில் விசாரித்தபோதுதான் விநாயக்கின் உண்மையான பெயர் மதன்குமார் என்பதும், அவர் உடுக்கம்பாளையம் அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர் ஆறுமுகத்தின் மகன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து நாங்கள் 3 பேரும் அவரது வீட்டு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். விநாயக்கின் தந்தை அ.தி.மு.க. பிரமுகர் என்பதால், போலீஸார் அவர்களுக்கு சாதகமாக செயல்படுகின்றனர்” என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

Hot Topics

Related Articles