உலகம்

இலங்கை – பாகிஸ்தான் உறவுகள் 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையானது – இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர்

இருநட்புநாடுகளுக்கிடையிலான உறவானது 2500 ஆண்டுகள் பழமையானதாகும். உலகத்திலே அமைதி மற்றும் சமாதானத்தினை ஊக்குவிக்கின்ற பௌத்தம் மற்றும் இஸ்லாத்தின் நிலைபேறுடைய ஒழுக்கக் கோட்பாடுகளின் பொதுத்தன்மையினால் இருதரப்பு உறவுகள் மென்மேலும் வலுப்பெறுகின்றன என இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் கலாநிதி ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் 79 ஆவது தேசிய தினத்தின் சம்பிரதாய முறையிலான நிகழ்ச்சி பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகரகத்தால் கொழும்பிலமைந்துள்ள கலதாரி ஹோட்டலில் கொண்டாடப் பட்டது.

நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவுப் ஹக்கீம் இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதன்போது வரவேற்புரையாற்றிய இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் கலாநிதி ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை மற்றும் பாகிஸ்தானிற்கிடையிலான வலுவான இருதரப்பு உறவுகள் 1948 இல் இலங்கையின் முன்னாள் பிரதமர் டி.எஸ். சேனாநாயக்க பாகிஸ்தானிற்கு மேற்கொண்ட விஜயத்தின்பொழுது அடிதளமிடப்பட்டது.

இருநட்புநாடுகளுக்கிடையிலான உறவானது 2500 ஆண்டுகள் பழமையானதாகும். உலகத்திலே அமைதி மற்றும் சமாதானத்தினை ஊக்குவிக்கின்ற பௌத்தம் மற்றும் இஸ்லாத்தின் நிலைபேறுடைய ஒழுக்கக் கோட்பாடுகளின் பொதுத்தன்மையினால் இருதரப்பு உறவுகள் மென்மேலும் வலுப்பெறுகின்றன.

பாகிஸ்தானிய அரசு இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் பணியகத்தின் ஊடாக இலங்கை மாணவர்களுக்கு ஆயிரம் (1000) முழுமையான நிதியளிக்கப்பட்ட புலமைப்பரிசில்களை பல்வேறு துறைகளில் வழங்கவிருக்கின்றது.

அத்துடன் மாணவர் மற்றும் ஆசிரியர் பரிமாற்ற நிகழ்வுகளையும் மேற்கொள்ளவிருக்கின்றது. பாகிஸ்தானின் கொம்செட்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் உலக தரம்வாய்ந்த உயர் தொழில்நுட்ப பல்கலைக்கழகமொன்றினை இலங்கையில் ஸ்தாபிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன.

ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளின் பொழுதும் பாகிஸ்தான் பொறுப்புடைய நாடாக அதன் மதிநுட்பம் மற்றும் கட்டுப்பாட்டினை வெளிப்படுத்தியது.

பாகிஸ்தான் அனைத்துவிதமான இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகளிற்கு அர்த்தபுஷ்டியான பேச்சுவார்தைகளுடாக தீர்வு காண்பதற்கு ஆதரவளிக்கின்றது.

மேலும் தெற்காசியவில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தினை மேம்படுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் ஆதரவு மற்றும் இலங்கையில் பாராட்டுக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம் உரையாற்றுகையில்,

அவசியமான தருணங்களில் இலங்கைக்கு பெரிதும் ஆதரவாக செயல்படும் பாகிஸ்தானிய அரசாங்கம் மற்றும் மக்களிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். இருநாடுகளும் பல்வேறு துறைகளில் நெருங்கிய, சுமுகமான மற்றும் பரஸ்பர ஆதரவினையுடைய இருதரப்பு உறவுகளை எப்பொழுதும் பேணிவருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, சபாநாயகர் கருஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை இராணுவத்தின் அதிகாரிகள், இராஜ தந்திரிகள் மற்றும் வெவ்வேறு துறைகளை சார்ந்தோர் எனப் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Hot Topics

Related Articles