உலகம்

‘தமிழே வணக்கம்’ என்ற முழக்கத்துடன் தொடங்கியது சிங்கப்பூரின் 13 ஆவது தமிழ் மொழி விழா

சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா-2019, கடந்த மார்ச்-24 முதல் ‘தமிழே வணக்கம்’ என்ற முதல் தொடக்க நிகழ்ச்சிலிருந்து அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. வளர் தமிழ் இயக்கம் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த விழாவில் திருக்குறள் முதல் இன்றைய தகவல் தொழில்நுட்பத்துறை வரை தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தும் பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம் பெற்றுள்ளன.


சிங்கப்பூரில் உள்ள தமிழ் மாணவர்கள், இளைஞர்கள் என தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையிலும், தமிழ் மொழியின் சிறப்பை உணர்ந்து கொள்ளும் வகையிலும் இந்த விழா நடைபெறும்.
தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம் என்பதே இந்த விழாவின் மையக் கருத்து.

பதின்மூன்றாவது முறையாக நடைபெறும் இந்த விழாவினை சிங்கப்பூரின் தகவல் தொடர்பு துறை அமைச்சர் திரு ஈஸ்வரன், உடன் தமிழ் மொழி கற்றல், வளர்ச்சிக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு விக்ரம் நாயர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு முரளிதரன் பிள்ளை கலந்து கொண்டு அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தனர்.


ஆண்டுக்காண்டு தமிழ் மொழி விழாவில் மக்களின் ஈடுபாடு கூடிக்கொண்டே வருகிறது குறிப்பாக நம் இளைஞர்களின் ஈடுபாடு இன்னும் அதிகரித்து கொண்டே வருகிறது.

அதுவே ஒரு பெரும் சாதனை, வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் நம் தமிழ் அமைப்புகளின் ஈடுபாடு, கூட்டுமுயற்சி, புத்தாக்கமான நிகழ்ச்சிகள், இவையும் கடந்து 13ஆண்டுகளாக நாம் கண்டுவருகிறோம். அதனால் பல அம்சங்களில் பார்க்கும்பொழுது நல்ல முன்னேற்றம் அடைந்து வருகின்றது இந்த தமிழ் மொழி விழா.

எதிர்காலத்திலும் சரி இந்த காலகட்டத்திலும் சரி இன்னும் அதிகமான மின்மடல்களை நாம் பயன்படுத்தவேண்டும், ஏன் என்றால் இப்பொழுது மின் பொருளியலில் நாம் வாழ்ந்து வருகிறோம். எல்லோருமே இப்பொழுது மின்கருவிகளை பயன் படுத்தித்தான் பொதுவாக நாம் வாழ்க்கையில் ஈடுபட்டுவருகிறோம். அதனால் நம் தாய் மொழிக்கும் அது ஒரு முக்கிய இடம் இருக்கிறது. எப்படி இந்த மின் இழக்க கருவிகளை பயன்படுத்தி நம் தாய் மொழி புழக்கத்தை வளர்க்க வேண்டும் என்பது நாம் ஆழமாக சிந்தித்து செயல்படவேண்டும் என்று கூறினார்.


அமைச்சர் திரு ஈஸ்வரன். தொடர்ந்து அவர் கூறுகையில்,

இந்த விழா தொடர்ந்து செழித்தோங்க வேண்டும், தமிழ் மொழியின் இடம் சிங்கப்பூரில் நிலைத்துயிருக்க வேண்டும். அதற்கு நாம் எல்லோரும் இணைந்து வளர்தமிழ் இயக்கத்திற்கும், தமிழ் மொழி விழாவுக்கும், இதர தமிழ் அமைப்புகளுக்கும் நம் முழு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

வளர் தமிழ் இயக்கம் மற்றும் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஆதரவில் சிங்கப்பூரின் 43 தமிழ் அமைப்புகள் பங்கு பெற்று மார்ச் 23 முதல் ஏப்ரல் 28 வரை மொத்தம் 46 நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன.

முன்னதாக மார்ச்-18ஆம் தேதி வளர் தமிழ் இயக்கம் ஏற்பாட்டில் சிங்கப்பூரின் அனைத்து தமிழ் அமைப்புகளும் ஒன்று இணைந்து லிட்டில் இந்தியா பகுதிகளில் விழா குறித்து பரப்புரை நிகழ்த்தி மக்களை விழாவில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர்.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த தமிழ் மொழி விழாவானது சிங்கப்பூரில் வாழும் தமிழர்களுக்காக அமையும் ஒரு திருவிழாவாக இன்றி உலகெங்கும் வாழும் தமிழர்களையும் திரும்பி பார்த்து பெருமை கொள்ள செய்கிறது.
தமிழை நேசிப்போம்! தமிழில் பேசுவோம்!!

(கார்த்திகேயன் நடராஜன் )

Hot Topics

Related Articles