உலகம்

பொள்ளாச்சி கொடுமைக்கு குரல் கொடுக்க தள்ளுவண்டியில் வந்து வேட்புமனு தாக்கல்..!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குரல் கொடுக்க, கோவையைச் சேர்ந்த ஒருவர் தள்ளுவண்டியில் பெண்களை ஏற்றி வந்து மனு தாக்கல் செய்த சம்பவம் மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதையடுத்து, ‘பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்கு, கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொள்ளாச்சி சப்-கலெக்டரிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தின் கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்தவர் நூர் முகமது. இவர், பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்ய, தனது ஆதரவாளர்களான 4 பெண்களை தள்ளுவண்டியில் ஏற்றி இழுத்துக்கொண்டு வந்தார். கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல முயன்ற அவரை, போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர், தள்ளுவண்டியை வெளியே நிறுத்தி விட்டு, தனது ஆதரவாளர்களுடன் சென்று பொள்ளாச்சி தொகுதி தேர்தல் அலுவலர் ராமதுரைமுருகனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து நிருபர்களிடம் நூர் முகமது கூறுகையில், “இதுவரை நான், ஆண்டிபட்டி, மதுரை மேற்கு, ஆர்.கே.நகர் உள்ளிட்ட 29 இடங்களில் போட்டியிட்டுள்ளேன். இந்தமுறை, பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காக தேர்தலில் போட்டியிடுகிறேன். அதற்காகவே, தள்ளுவண்டியில் பெண்களை அமர வைத்து, அந்த வண்டியை நானே இழுத்துவந்து மனு தாக்கல் செய்தேன்” என்றார்.

வேட்புமனு தாக்கல் செய்ய வந்த ஒருவர், தள்ளுவண்டியில் 4 பெண்களை ஏற்றி இழுத்துவந்து சம்பவம் மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

 

Hot Topics

Related Articles