ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடரின் இன்றைய அமர்வில் இலங்கைதொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது.
ஜெனிவா விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் இன்றைய தினம் இலங்கை தொடர்பான விவாதம் பல்வேறு நாடுகளின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ளது.

இன்று காலை ஜெனிவா நேரப்படி 9 மணியளவில் இலங்கை தொடர்பான விவகாரம் எடுக்கப்படவுள்ளது.
முதலில் இலங்கை தொடர்பான அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லட் உத்தியோகப்பூர்வமாக வெளியிடவிருக்கின்றார். அறிக்கை உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்ட பின்னர் அது மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

இதன்போது உரையாற்றவுள்ள கனடா பிரிட்டன் மற்றும் ஜேர்மன் உள்ளிட்ட நாடுகள் இலங்கை விவகாரத்தில் அழுத்தங்களைப் பிரயோகிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இன்றைய இலங்கை குறித்த விவாதத்துக்கு தயாராகி வருகின்றனர்.

இலங்கையின் சார்பிலும் அரசாங்கத்தின் தூதுக்குழுவினர் இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர். வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபன, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அமுனுகம, வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் உள்ளிட்ட அரசாங்கத் தரப்பு பிரதிநிதிகள் இந்த இலங்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொள்ள உள்ளனர். விசேடமான இன்றைய விவாதத்தில் அரசாங்கம் சார்பில் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here