உலகம்

“பணம், பரிசுடன் வந்தால் பித்துக் கொடுப்போம்..!” – பொதுமக்கள் எச்சரிக்கை

‘வாக்கிற்காக, பணமோ அல்லது பரிசுப் பொருளோ கொடுக்க வந்தால், தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவீர்கள்’ என, தென் சென்னை தொகுதி பொதுமக்கள் அரசியல் கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


தேர்தலின்போது, வாக்காளர்கள் தமக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக வேட்பாளர்கள் வாக்கிற்காக பணம், பரிசு பொருட்கள் மற்றும் இதர தேவைகளை செய்து கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது வழக்கம். இதற்கு முன்னர் நடந்த சில தேர்தல்களில், தேர்தல் கமிஷனின் தீவிர கண்காணிப்பு இருந்தும், பணப் பட்டுவாடா நடந்தது.

இந்நிலையில், தென் சென்னை தொகுதியான கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள கல்யாணிநகர், கற்பகம்பாள் நகர், ராஜா தோட்டம் பகுதி மக்கள் ‘எந்த ஒரு அரசியல் கட்சியோ மற்றும் தனிநபரோ, எங்கள் பகுதியில் பணமோ, பரிசுப் பொருளோ கொடுக்கக் கூடாது; மீறினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவீர்கள். ஜனநாயக கடமையாற்ற, அனைவரும் வாக்களிக்க வேண்டுகிறோம்’ என்ற வாசகங்களுடன் எச்சரிக்கை பதாதைகள் வைத்துள்ளனர்.

இது குறித்து நலச்சங்கத்தினர் கூறியதாவது;

“எங்கள் பகுதியில் கழிவுநீர் செல்ல வாய்க்கால் வசதி இல்லை. சாலைகளையும் முறையாக பராமரிப்பது இல்லை. குளங்களை சீரமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தோம்; இதுவரை நடவடிக்கை இல்லை.

வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. எங்களுக்கு பணமோ, பரிசுப் பொருளோ தேவையில்லை; அடிப்படை கட்டமைப்பு வசதிதான் தேவை. இதை உணர்ந்து, தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், தனி நபர்கள் எங்களை அணுக வேண்டும்” என, தெரிவித்தனர்.

Hot Topics

Related Articles