உலகம்

இறுதிவரை நகர்ந்த பரபரப்பான போட்டியில் இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்த தென்னாபிரிக்கா

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் இடம்பெற்ற முதலாவது இருபதுக்கு -20 போட்டி இறுதிவரை மிகவும் பரபரப்பாக நகர்ந்த நிலையில், இறுதியில் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த்து.

இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 134 ஓட்டங்களை பெற்றிருந்த்து. பதிலுக்கு வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணியும் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களைப் பெற போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

போட்டியின் இறுதிப் பந்தில் 2 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடி தென்னாபிரிக்க அணி ஒரு ஓட்டத்தைப்பெற்று போட்டியை சமநிலை செய்தது. இதன்போது இலங்கை அணிக்கு கிடைக்கப்பெற்ற ஆட்டமிழப்பை டிக்வெல்ல நழுவவிட்டார்.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியை தீர்மானிக்க சுப்பர் ஓவர் வழங்கப்பட்டது.

இதில் முதலாவதாக சுப்பர் ஓவரில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணிக்கு இலங்கை அணியின் மலிங்க பந்து வீசினார்.

தென்னாபிரிக்க அணி சுப்பர் ஓவரில் 14 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து இலங்கை அணிக்கு சுப்பர் ஓவரில் 15 ஓட்டங்களை பெற்றால் வெற்றியென்ற நிலையில் துடுப்பெடுத்தாடியது.

தென்னாபிரிக்க அணி சார்பாக சுப்பர் ஓவரை இம்ரான் தாஹிர் வீசினார்.
தாஹிர் வீசிய ஓவரில் இலங்கை அணி 5 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

தென்னாபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அவ்வணியுடன் 2 போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடரிலும் 5 போட்களைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் 3 போட்டியைக் கொண்ட இருபதுக்கு -20 தொடரிலும் பங்கேற்று விளையாடியது.

இந்நிலையில் டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என வெற்றி பெற்றிருந்த நிலையில், ஒருநாள் தொடரை 5-0 என தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்றது.

இந்நிலையில், இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு – 20 போட்டியின் முதலாவது இருபதுக்கு – 20 போட்டி இன்று தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் இடம்பெற்றது.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அதன்படி முதலாவதாக துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக கமிந்து மெண்டிஸ் 41 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். ஏனையோர் சொற்ப ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தனர்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய ஆண்டில் பெஹல்குவே 25 ஓட்டங்களைக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு 135 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களைப்பெற்று போட்டியை சமநிலை செய்தது.

தென்னாபிரிக்க அணி சார்பாக மில்லர் 41 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக மலிங்க 11 ஓட்டங்களைக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து வெற்றி தோல்வியை தீர்மானிக்க போட்டி சுப்பர் ஓவருக்கு நகர்ந்தது.

சுப்பர் ஓவரில் தென்னாபிரிக்க அணி 14 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு சுப்பர் ஓவரில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 5 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியடைந்தது.

3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரில் சுப்பர் ஓவர் முறையில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி 1-0 என முன்னிலைபெற்றுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது இருபதுக்கு -20 போட்டி எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

 

Hot Topics

Related Articles