நெருங்கி வரும் லோக்சபா தேர்தலை வரவேற்க, அனைத்து கட்சிகளின் கொடிகள் மற்றும் தோரணங்கள் தயாரிக்கும் பணி திருப்பூரில் தீவிரமாக நடந்து வருகிறது.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, பிரச்சாரம் சூடுபிடிக்கும். இதற்காக, தலைவர்களின் உருவம் பொறித்த கட்சிக் கொடிகள் தயாரிப்பு பணி திருப்பூரில் தீவிரமாக நடந்து வருகிறது.
வழக்கமாக, கம்பங்களின் நுனியில் கட்டி உயரத்தில் பறக்கும் கொடிகளுக்கே அதிக மவுசு இருக்கும். ஆனால் இந்தமுறை, ‘சைனீஸ்’ ரக கொடிகளுக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக 3 அடி அகலம், 4 அடி உயரமுள்ள இந்த ரக கொடிகள், கம்பங்களின் நுனிக்கு பதிலாக பக்கவாட்டில் பறக்க விடப்படுவதால், அதிக கவனம் ஈர்க்கின்றன. இதனால், பெரும்பாலான கட்சிகள் ‘சைனீஸ்’ ரக கொடிகளையே ஆர்டர் செய்கின்றன.
இதுகுறித்து, திருப்பூரைச் சேர்ந்த கொடி தயாரிப்பாளர் மகேஷ் கூறியதாவது; “வழக்கமாக நாங்கள், தமிழக கட்சிகளுக்கு மட்டுமின்றி வெளிமாநில கட்சிகளுக்கும் கொடிகள் மற்றும் தோரணங்கள் தயாரித்து அனுப்பி வருகிறோம். இது, லோக்சபா தேர்தல் என்பதால் கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டில்லி, மத்திய பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், மேற்கு வங்க மாநிலங்களில் இருந்தும் அதிக அளவு ஆர்டர் வருகின்றன.
தற்போது, தினமும் 10 ஆயிரம் கொடிகள்வரை தயாரிக்கிறோம்.
தமிழகத்தில், கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், பொலியஸ்டர் மற்றும் பேப்பர் அட்டை பயன்படுத்தியே கொடிகள் மற்றும் தோரணங்களை தயாரிக்கிறோம். இந்தமுறை, மப்ளர், தொப்பி, காரில் பறக்கவிட பிரத்யேக எல்.இ.டி. விளக்கு பொருத்தப்பட்ட கொடிகளையும் புதிதாக அறிமுகம் செய்துள்ளோம்” என, அவர் தெரிவித்தார்.