பிரபல பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் பதிப்பாளருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
வட கிழக்கு மாநிலமான மேகாலயாவில் இருந்து வெளியாகும் பிரபல பத்திரிகை ‘ஷில்லாங் டைம்ஸ்’. இதன் ஆசிரியராக இருப்பவர் பேட்ரிஷியா முக்ஹிம். இவர், ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை மற்றும் சலுகைகளை விமர்சித்து சமீபத்தில் செய்திக் கட்டுரை எழுதினார்.
இது தொடர்பாக, பத்திரிகை ஆசிரியர் பேட்ரிஷியா மற்றும் பதிப்பாளர் ஷோபா சவுத்ரி ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், இருவரையும் குற்றவாளிகள் என மேகாலயா உயர் நீதிமன்றம் அறிவித்தது. இருவருக்கும் தலா, 2 லட்சம் ரூபாய் அபராதமும், அதை செலுத்த தவறினால் ஆறு மாத சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பேட்ரிஷியா மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள், தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மேகாலயா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.