உலகம்

நியூசிலாத்தில் பள்ளிவாசல்களில் துப்பாக்கிப் பிரயோகம் ; 40 பலி, 27 பேர் காயம், 4 பேர் கைது

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் நகரத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


குறித்த சம்பவத்தில் இதுவரை 40 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 27 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பெணணொருவர் உட்பட 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் நகரில் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் தங்கி இருந்த இடத்திற்கு அருகே உள்ள இரண்டு பள்ளிவாசல்களிலேயே குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் இடம்பெறும் போது 200 க்கும் அதிகமான பொதுமக்கள் இருந்திருக்கலாமென நியூசிலாந்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலர் இறந்திருக்கலாம் அத்துடன் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதையடுத்து துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இரு பள்ளிவாசல்களிலும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை, நியூசிலாந்து பொலிஸார் பாதுகாப்புக் கருதி நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களையும் மூடுமாறு உத்தரவிட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட 28 வயதான அவுஸ்திரேலிய நாடடைச் சேர்ந்த துப்பாக்கிதாரி சம்பவத்தை நேரலையாக வீடியோவாக பதிவாக்கியுள்ளார். அவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சிறுவர்கள் உட்பட பலர் கொல்லப்படும் காட்சிகள் குறித்த காணொளியில் பதிவாகியுள்ளது.

குறித்த துப்பாக்கிதாரி அவுஸ்திரேலிய நாட்டவர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பெருமளவு இறந்த உடல்கள் ஒரு பள்ளிவாசலில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிறைச்ட்சேர்சின் அல்-நூர் பள்ளிவாசலில் 50 க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நியூசிலாந்து நேரப்படி வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற இடத்தில் எங்கு பார்த்தாலும் இரத்தக்கறை காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆயுததாரரி பயணித்த கார் சம்பவம் இடம்பெற்ற பள்ளிவாசலுக்கு 3 கிலோ மீற்றர் தூரத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நியுசிலாந்தின் கிறைஸ்சேர்ச்சில் பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளதை தொடர்ந்து நியுசிலாந்திற்கான பங்களாதேஸ் அணியின் சுற்றுப்பயணம் கைவிடப்பட்டுள்ளது.

பங்களாதேஸ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையும் நியுசிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையும் இன்று ஹாக்லி ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவிருந்த மூன்றாவது டெஸ்டை கைவிடுவது என தீர்மானித்துள்ளன.

நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம் நியுசிலாந்து மக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர் என தெரிவித்துள்ள நியுசிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவர் டேவிட் வைட், நான் பங்களாதேஸ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன், இருவரும் இந்த சூழலில் கிரிக்கெட் விளையாடுவது பொருத்தமற்றது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை தாக்குதல் இடம்பெற்ற மசூதிக்கு தொழுகைக்காக சென்று கொண்டிருந்த பங்களாதேஸ் வீரர்கள் தகவல் அறிந்ததும் வேறு பகுதிக்கு தப்பிச்சென்றுள்ளனர்.

தாக்குதல் இடம்பெறுவதை பார்த்ததும் பங்களாதேஸ் அணிவீரர்கள் தங்கள் பேருந்திற்குள்ளேயே இருந்துள்ளனர்.

இதன் பின்னர் அவர்கள் பேருந்திலிருந்து இறங்கி ஹக்லி பார்க் ஊடாக மைதானத்திற்கு ஒடிச்சென்றுள்ளனர்.பின்னர் அவர்கள் ஹோட்டலிற்கு சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் கூறும்போது, இன்றைய நாள், நியூசிலாந்து வரலாற்றில் மோசமான நாள். இது எதிர்பாராத வன்முறை சம்பவம் எனக் கூறியுள்ளார்.

Hot Topics

Related Articles