உலகம்

“மோடி ஆட்சி நீடித்தால் ஜனநாயகத்திற்கு ஆபத்து : முறியடிக்கசே எமது கூட்டணி.!” – ராகுல் காந்தி ஆவேசம்

“மோடி ஆட்சி நீடித்தால், ஜனநாயகத்திற்கு ஆபத்து; இதை முறியடிக்கவே நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம்” என்று, நாகர்கோவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் ராகுல் காந்தி ஆவேசமாக கருத்து வெளியிட்டார்.
தமிழகத்தின் நாகர்கோவிலில் நேற்று (13 ஆம் திகதி) மாலை, காங்கிரஸ் – திமுக கூட்டணி கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நடந்தது.


இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசியதாவது:

“வெகு விரைவில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். ஸ்டாலின் தமிழக முதல்வாராவார். இங்கே அமைத்துள்ள கூட்டணி சாதாரண கூட்டணி அல்ல; மக்கள் கூட்டணி. பிரதமர் மோடியால், தமிழ் மொழிக்கும், மக்களுக்கும், கலாச்சாரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை இந்த கூட்டணி மீட்டெடுக்கும்.


லோக்சபா தேர்தலில் தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும். மோடியின் கைப்பாவையாக தமிழக அரசு செயல்படுகிறது. கடந்த காலத்தில் தி.மு.க, அ.தி.மு.க. இடையே போட்டி இருந்தது. இரு கட்சிகளிலும் பெரிய தலைவர்கள் இருந்தனர். ஆனால், அப்போது டில்லியில் இருந்து இயக்கப்படும் ஆட்சி நடக்கவில்லை. தமிழக அரசு, தமிழக மக்களின் உணர்வுகளால் இயக்கப்பட வேண்டும். அனைத்து அரசியல் அமைப்புகள், மாநிலங்களை அடக்க மோடி முயற்சிக்கிறார். தமிழகத்தின் உரிமைகளை அடக்குவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். தமிழக மக்கள் உண்மை பக்கம் இருப்பார்கள்.

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார் பிரதமர் மோடி. ஆனால், நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. விவசாயிகள் வாழ்வுக்காக போராடி வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் மாநிலங்களில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. பொய்யை தவிர மோடி எதையும் பேசுவதில்லை. மோடியின் திட்டங்கள் அனைத்தும் பணக்காரர்களை பாதுகாக்க பயன்படுகிறது.


நாடு சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. பொய் சொல்வதை தவிர மோடிக்கு எதுவும் தெரியாது. மோடி ஆட்சி நீடித்தால், ஜனநாயகத்திற்கு ஆபத்து. இதனை முறியடிக்க நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம். காங்கிரஸ் ஆட்சியில் எச்.ஏ.எல் நிறுவனத்திற்கு, ரபேல் ஒப்பந்தத்தை வழங்க இருந்தது. விமானத்தை, ரூ.526 கோடிக்கு வாங்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் மோடி ஆட்சியில், ஒப்பந்தம் அனில் அம்பானிக்கு கொடுக்கப்பட்டதுடன், விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியால் நாடு இரண்டாக பிரிந்துள்ளது.

இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலையில்லை. விவசாயிகள் வாழ்வை இழந்து விட்டனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வேலையில்லா பிரச்னை தீர்க்கப்படும். தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்படும். ரூபாய் நோட்டு வாபஸ், ஜிஎஸ்டி காரணமாக சிறு குறு தொழில்கள் அழிந்துவிட்டன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் ஜிஎஸ்டியை மாற்றியமைப்போம். ஒரே வரியாக மாற்றப்படும். தொழில் வளர்ச்சியில் முன்னணிக்கு வரும் வாய்ப்பு தமிழகத்திற்கு உள்ளது. சீனாவின் சந்தையாக இருப்பதிலிருந்து இந்தியா விடுபட வேண்டும்.

வங்கியில் பல கோடி கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் எத்தனை பேருக்கு வேலை கொடுத்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில், நிரவ் மோடி போன்றவர்களுக்கு கடன் வழங்காமல், இளைஞர்கள், தொழிலாளிக்கு கடன் வழங்குவோம். அனைவருக்கும் குறைந்தபட்ச வருமான உறுதியளிப்பு திட்டத்தை செயல்படுத்துவோம். மீனவர் நலத்துறை அமைச்சகம் அமைக்கப்படும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற திட்டங்களை கொண்டு வருவோம். பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்” என, அவர் பேசினார்.

Hot Topics

Related Articles