உலகம்

கண்ணைக் கவரும் ஓவியங்களுடன் கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு..!

புதுச்சேரியில், கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு கண்காட்சியில் இடம்பெற்றுள்ள தென்னை மர தட்டி மற்றும் பனை ஓலைகளில் வரையப்பட்டுள்ள தலைவர்களின் ஓவியங்கள், பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

உலக கண் நீர் அழுத்த நோய் வாரத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில், புதுவை நகராட்சி மற்றும் அரவிந்த் கண் வைத்தியசாலை சார்பில் கண் நீர் அழுத்த நோய் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடைபெறுகிறது. கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கணேசன், புதுவை நகராட்சி ஆணையர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் ஆகியோர் கண்காட்சியை தொடங்கிவைத்தனர்.

இதன் ஒரு பகுதியாக, மகாத்மா காந்தி, அன்னை தெரசா, பாரதியார், அரவிந்தர் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் அப்துல்கலாம், ராதாகிருஷ்ணன் ஆகியோரின் ஓவியங்கள் தென்ன மர தட்டி, தென்னை மட்டை, பனை ஓலை, பனை ஓலை விசிறி, வாட்டர் பாட்டில், தைல மரக் குச்சி, கருவேலமர கம்பு போன்றவைகளில் தத்ரூபமாக வரையப்பட்டு, பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், வெனிஸ் நகரம், திமிங்கலம் மற்றும் வன விலங்குகளின் ‘3 டி’ ஓவியமும் இடம் பெற்றுள்ளது.

இந்த ஓவியங்களில், கண் நீர் அழுத்த நோய் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்களும் இடம்பெற்றுள்ளது. இந்த ஓவியங்கள் அனைத்தும் மக்களை பெரிதும் கவர்வதால், அதன் முன்பு நின்று போட்டோ எடுத்துக்கொள்ள பார்வையாளர்களிடம் போட்டி நிலவுகிறது. இந்த கண்காட்சி, வரும் 17ம் தேதி வரை நடைபெறுகிறது.

Hot Topics

Related Articles