கோயில் திருவிழாவில் நடைபெற்ற ஏலத்தில், ஒரு எலுமிச்சம் பழத்தை பக்தர் ஒருவர் 30 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் மூலம் வாங்கிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சிவகிரியை அடுத்த புது அண்ணாமலை பாளையம் கிராமத்தில் பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரன் கோயில் உள்ளது.
ஆண்டுதோறும் இங்கு மகா சிவராத்திரி விழா பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டின் மகா சிவராத்திரி விழா பூஜைகள் கடந்த 4 ஆம் திகதி நள்ளிரவு நடைபெற்றன.
கடந்த 6 ஆம் திகதி இரவு, பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரனுக்கு மறுபூஜைகள் நடத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து, சிவராத்திரி சிறப்பு பூஜையில் வைக்கப்பட்ட பொருட்களை ஏலம் விடும் நிகழ்வு நடைபெற்றது.
முதலில், ஒரு எலுமிச்சம் பழம் ஏலம் விடப்பட்டது. 2 ரூபாயில் தொடங்கிய ஏலம், சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்த பக்தர்களின் போட்டியால் ஆயிரங்களைத் தாண்டிச் சென்றது.
இறுதியில், ஈரோடு புதூரைச் சேர்ந்த சக்திவேல் என்ற பக்தர், 30 ஆயிரம் ரூபாய்க்கு அந்த எலுமிச்சம் பழத்தை ஏலத்தில் எடுத்தார். இதேபோல், 5 கிராம் எடையுள்ள வெள்ளி மோதிரம் ஒன்று 50 ஆயிரம் ரூபாய்க்கும், வெள்ளி காசு ஒன்று 43 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் போனது.
”மகா சிவராத்திரி சிறப்பு பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட பொருட்களை வீட்டில் வைத்து பூஜித்தால் நன்மை நடக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாகவே, போட்டி போட்டு வாங்கிச் செல்கிறோம்” என்று பக்தர் சக்திவேல் கூறினார். இதே கோயிலில், கடந்த ஆண்டு சிவராத்திரி விழாவில் ஒரு எலுமிச்சம் பழம் 6 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.