கோவில்பட்டி அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில், 68 முறை அரிவாள் மீது நடந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறிய பூசாரிக்கு, 68 கிலோ மிளகாய்பொடி கரைசலில் அபிஷேகம் செய்யப்பட்டது.
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் கிராமத்தில் உள்ளது பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் இரண்டு நாட்கள் நடைபெறும் மாசி கொடை விழாவும், அரிவாள்கள் மீது நடந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சியும் மிகவும் பிரபலம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான கொடை விழா கடந்த 6 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6.30 மணிக்கு படி பூஜை, இரவு 7.30 மணிக்கு பதினெட்டாம்படி கருப்பசாமி குதிரை பவனி வருதல் போன்றவை நடந்தது. நள்ளிரவு 12.15 மணிக்கு சாம பூஜை நடந்தது.
இரண்டாம் நாளான நேற்று (7 ஆம் திகதி) காலை 9 மணிக்கு, 108 பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக ஊரைச்சுற்றி கோயிலை வந்தடைந்தனர். 10.30 மணிக்கு, கோயில் முன்பு பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். மதியம் 12 மணிக்கு படி பூஜை நடந்தது.
இதையடுத்து, கோயில் முன்பு இருந்த மேடையில் அமைக்கப்பட்டிருந்த 21 அரிவாள்கள் மீது, கோயில் பூசாரி 68 முறை தனியாக நடந்தும், குழந்தைகளை தூக்கியவாறு நடந்தும் பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கினார். தொடர்ந்து, 68 கிலோ மிளகாய் பொடியை தண்ணீரில் கரைத்து, அந்த தண்ணீரால் பூசாரிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
இந்த விழாவில், கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.