கழிவறை கட்டித் தருவதாக கூறி முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கழிவறை கோப்பையை தலையில் சுமந்து வந்த பெண்ணால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (4ம் தேதி) மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், கலெக்டரே நேரடியாக மனுக்களை பெற்றுக்கொள்வார் என்பதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க வந்திருந்தனர்.அப்போது, திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகேயுள்ள மாங்கரை நெட்டியபட்டியைச் சேர்ந்தவர் குப்பமுத்து மனைவி பாண்டியம்மாள் என்பவர், கழிவறை கோப்பை ஒன்றை தலையில் சுமந்தபடி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கிருந்தவர்கள், ’ஏன் கழிவறை கோப்பையுடன் வருகிறார்..?’ என ஆச்சரியத்துடன் அவரை பார்த்தனர்.எதையும் பொருட்படுத்தாத பாண்டியம்மாள், கலெக்டரிடம் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், “நெட்டியபட்டி கிராமத்தில், மத்திய அரசின் மானியத்துடன் கழிவறை கட்டித் தருவதாக கூறி கணக்கெடுப்பு நடத்தினர். அதற்கு நானும் பெயர் கொடுத்தேன். ஆனால், கழிவறை கட்டித்தராமல் அதில் பொருத்தப்படும் கோப்பையை மட்டுமே தந்தனர்.

இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, ‘கோப்பை மட்டும்தான் தருவோம்; கழிவறையை நீங்கள்தான் கட்டிக்கொள்ள வேண்டும்’ என்று கூறிவிட்டனர். கழிவறை இல்லாமல் வெறும் கோப்பையை மட்டும் வைத்து எப்படி பயன்படுத்த முடியும்..? இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

இந்த புகார் மனு குறித்து விசாரணை நடத்தும்படி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தால், கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here