உலகம்

கர்ப்பிணிகள் கோப்பி குடிக்கலாமா?

கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் கோப்பி அருந்துவது, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.


கோப்பி அருந்துவது சாதாரணமான ஒன்று. வீடு தேடிவரும் விருந்தினரை சிறப்பிக்கும் விதமாக கோப்பி வழங்கப்படும். மனிதனின் வாழ்க்கையோடு கோப்பி, கலந்துவிட்ட ஒன்றாகிவிட்டது.

கோப்பியை அருந்துவதால் ஏற்படும் பலன்களை பற்றியும், அதன் மூலம் ஏற்படும் சில ஆரோக்கிய சீர்கேடுகளை பற்றியும் பலவிதமான ஆய்வுத்தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் இந்த ஆய்வு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் கோப்பி அருந்துவது, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கர்ப்பிணி பெண்கள் கோப்பி அருந்துவது குறித்து, சுவீடன் நாட்டில் சால்கிரென்ஸ்கா பல்கலைக்கழக பேராசிரியர் வெரெனா செங்பையீல் தலைமையிலான குழு ஆய்வு நடத்தியது.

50 ஆயிரத்து 943 கர்ப்பிணிகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. உலக அளவில் கர்ப்பிணி பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட மிக பெரிய சுகாதார ஆய்வில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

அதில் அதிகமாக கோப்பி அருந்தும் கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் அதிக எடையுடனோ அல்லது பருமனாகவும் இருக்கக்கூடும் என்ற தகவல் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. குறைவாக கோப்பி எடுத்து கொண்ட தாய்மார்களை விட அதிக காபி எடுத்து கொண்டவர்களின் குழந்தைகளுக்கு 5 வயது ஆகும்போது உடல் அதிக பருமனாகும் சாத்தியமும் உள்ளது. அதிக வளர்ச்சிக்கும் இது வழிவகுக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது. இதனால், குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் வயதில் அதிக எடையுடன் இருப்பர்.

எனவே, ஒரு நாளைக்கு அதிக அளவில் கர்ப்பிணி பெண்கள் கோப்பி பருகக்கூடாது என சுவீடனின் தேசிய உணவுக்கழகம் தெரிவித்துள்ளது.

Hot Topics

Related Articles