லோக்சபா தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் தலைவர்களின் உருவம் பொறித்த ஆடைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதில், பிரதமர் மோடி உருவ சேலையை பெண்கள் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர்.
இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான லோக்சபா தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு என முழுவீச்சில் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். அத்துடன், கட்சிக் கொடிகள், போஸ்டர்கள் மற்றும் விளம்பர பேனர்கள் தயாரிப்பு பணிகளும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்ற தலைவர்களின் உருவம் பொறித்த சேலைகள் மற்றும் டி-ஷர்ட்கள் மும்பையின் தாதர் மார்க்கெட்டில் உள்ள ஜவுளிக் கடைகளில் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளன. இவைகளை, அந்தந்த கட்சிகளின் தொண்டர்கள் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர்.
இதுகுறித்து, தாதரில் ஜவுளிக்கடை நடத்தி வரும் பிந்தியா லால் என்பவர் கூறியதாவது; “2013 ஆம் ஆண்டு முதலே நாங்கள் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்ற அரசியல் தலைவர்களின் உருவம் பொறித்த சேலைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.
ஆரம்பத்தில் இதுபோன்ற உருவம் பொறித்த சேலைகளை அணிய தயக்கம் காட்டிய பெண்கள், இப்போது ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர்.
அத்துடன், உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி வெளிமாநிலத்தைச் சேர்ந்த அரசியல் கட்சியினரும் தங்கள் கட்சி சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டங்கள், பேரணிகளில் கலந்துகொள்ளும் தொண்டர்களுக்கு வழங்க மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். சேலையின் தரம் மற்றும் அதில் செய்யப்பட்டுள்ள வேலைப்பாடுகளைப் பொறுத்து ஒரு சேலை 500 முதல் 2 ஆயிரம் ரூபாய் வரையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
சமீபத்தில், ‘பிரதமர் நரேந்திர மோடியின் உருவம் பொறித்த 300 சேலைகள் வேண்டும்’ என்று தமிழ்நாட்டில் இருந்து ஆர்டர் வந்தது; நாங்கள் முடித்துக் கொடுத்தோம். சென்னையில் நடைபெற உள்ள ஒரு பொதுக் கூட்டத்திற்காக அந்த சேலைகளை வாங்கி உள்ளனர்” என்று தெரிவித்தார்.