உலகம்

தென்னாபிரிக்காவில் வென்று வரலாற்று படைக்குமா இலங்கை ?

தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் 128 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்க அணியை சுருட்டிய இலங்கை அணி, 196 ஓட்டங்களை சேஸிங் செய்து வரலாற்று சாதனை படைக்குமான என்ற கனவு இலங்கை அணி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


இரு அணிகளுக்குமிடையிலான 2 டெஸ்ட் போட்டியின் 2 ஆவது இன்னிங்சில் தென்னாபிரிக்க அணி 128 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து சுருண்டதால் இலங்கையின் வெற்றிக்கு 197 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்கா – இலங்கை இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமாகியது. நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்கா துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

இலங்கையின் நேர்த்தியான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தென்னாபிரிக்கா 222 ஓட்டங்களில் சுருண்டது. தொடக்க வீரர் மார்க்கிராம் 60 ஓட்டங்களையும் விக்கெட் கீப்பர் டி காக் 86 ஓட்டங்களையும் சேர்த்தனர். இலங்கை அணி சார்பில் பெர்னாண்டோ, ரஜித தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சில் விளையாடியது. போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் இலங்கை 3 விக்கெட் இழப்பிற்கு 60 ஓட்டங்களை எடுத்திருந்தது. போட்டியின் 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது.

தென்னாபிரிக்காவின் ரபாடா பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை 154 ஓட்டங்களுக்குள் சுருண்டது. விக்கெட் கீப்பர் டிக்வெல்ல தாக்குப்பிடித்து 42 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். ரபாடா 4 விக்கெட்டும், ஆலிவியர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தென்னாபிரிக்கா முதல் இன்னிங்சில் 68 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. இந்த முன்னிலையுடன் 2 ஆவது இன்னிங்சை தொடங்கியது. இலங்கையின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 2ஆவது இன்னிங்சிலும் தென்னாபிரிக்க மளமளவென விக்கெட்டுக்களை இழந்தது.

டு பிளிசிஸ்-ஐ தவிர மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க 128 ஓட்டங்களுக்குள் சுருண்டது தென்னாபிரிக்கா. 8 பேர் ஒற்றையிலக்க ஓட்டங்களுடன் வெளியேறினார்கள். டு பிளிசிஸ் 50 ஓட்டங்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். லக்மல் 4 விக்கெட்டும், டி சில்வா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

தென்னாபிரிக்கா அணி ஒட்டுமொத்தமாக 196 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 197 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த டெஸ்டில் இலங்கை வெற்றி பெற்றால், தென்னாபிரிக்காவை 2-0 என வையிட்வொஷ் செய்து தென்னாபிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையைப் படைக்கும்.

Hot Topics

Related Articles