உலகம்

நின்றபடியே 10 ஆயிரம் கிலோமீற்றர் மோட்டார் சைக்கிள் ஓட்டம் எதற்காக தெரியுமா ?

பத்தாயிரம் கிலோமீற்றர் தூரம் நின்றபடியே பைக் ஓட்டி, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ள பெண்மணிக்கு மதுரை அருகே வரவேற்பு கொடுக்கப்பட்டது.


நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள மன்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சைபீ மேத்யூ. இவர், பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், தமிழகம் முழுவதும் 10ஆயிரம் கிலோமீற்றர் தூரத்திற்கு நின்றபடியே பைக் ஓட்டிச் சென்று சாதனை படைக்க திட்டமிட்டு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த 13 ஆம் திகதி காலை மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கள்ளிக்குடிக்கு வந்த சைபீ மேத்யூவுக்கு, சித்தர் கூடம் கல்வி நிறுவனங்கள், விருதுநகர் பசுமை இந்தியா அமைப்பினர் மற்றும் திருமங்கலம் களப்பணி நண்பர்கள் குழுவின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.


இதையடுத்து, சித்தர்கூட கல்வி நிறுவனங்களான நம் குழந்தைகள் இல்லம், சித்தர் கருவூறார் தொழிற்பயிற்சி பள்ளி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மாணவ – மாணவிகளிடம் பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தும் சாக்லேட் கவர், தின்பண்டங்கள் பேக்கிங் செய்யப்பட்டு வரும் பாலித்தீன் பைகள் போன்றவற்றை தரம் பிரித்து அகற்றுவது குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்.

இதையடுத்து, விருதுநகர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை எற்படுத்த, நின்றபடியே பைக்கை ஓட்டிச் சென்றார். இந்நிகழ்ச்சியில், சித்தர் கூட கல்வி நிறுவன நிர்வாகிகள், திருமங்கலம் களப்பணி நண்பர்கள் குழுவினர், விருதுநகர் பசுமை இந்தியா அமைப்பினர் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாதனை பெண்மணி சைபீ மேத்யூவை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

Hot Topics

Related Articles