சென்னையில் உள்ள தனியார் சாஃப்ட்வேர் நிறுவன ஊழியர்கள், பார்வையற்ற மற்றும் செவித் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுடன் காதலர் தினத்தை கொண்டாடிய நிகழ்வு அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னை அண்ணாசாலையில் சிறுமலர் பார்வையற்றோர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், 100 க்கும் அதிகமான செவித் திறன் மற்றும் பார்வைத் திறன் குறைபாடுள்ள குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் உள்ள ‘நம்பிக்கைக்கான முயற்சி’ என்ற அமைப்பின் தலைவர் சரவணன் மற்றும் துணைத் தலைவர் செந்தில் ஆகியோர், தனியார் சாஃப்ட்வேர் நிறுவன ஊழியர்களுடன் இணைந்து இந்தப் பள்ளியின் மாணவர்களுடன் காதலர் தினத்தை வித்தியாசமாக கொண்டாட விரும்பினர்.
இதையடுத்து பள்ளி நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று, மாணவர்களுக்கு ஓட்டப்பந்தயம், பின்னோக்கி நடத்தல், பாட்டுப்போட்டி, மியூஸிக்கல் சேர் உட்பட பல்வேறு போட்டிகளை நடத்தினர். இதில் ஏராளமான மாணவ – மாணவிகள் கலந்துகொண்டு, தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து, இப்பள்ளியில் கடந்த கல்வியாண்டில் சிறப்பாக பயின்று தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ – மாணவியரைப் பாராட்டி நினைவுப் பரிசுகளும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
“காதலர் தினத்தை, மாற்று முறையில் கொண்டாடியது மிகுந்த மனநிறைவைத் தருகிறது. மற்ற விழாக்களையும் இதுபோல் மாற்றுத் திறனாளிகளுடன் கொண்டாடி, அவர்களை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ள வேண்டும்” என, பள்ளி நிர்வாகத்தினர் கூறினர்.