உலகம்

கல்வி சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள் ; விசித்திர சம்பவம்..!

தங்கள் பிள்ளைகள் படிக்கும் அரச பாடசாலைகளுக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி சீர்வரிசையை கிராம் மக்கள் வழங்கியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியத்திற்கு உட்பட்ட கே.பெரியப்பட்டி, பன்னாங்கொம்பு, பெரிய மணப்பட்டி, தாதநாயக்கன்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள அரசுப் பள்ளிக்கூடங்களில் ஆயிரக்கணக்கான மாணவ – மாணவியர் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளிகளுக்குத் தேவையான கல்வி உபகரணங்களை வழங்கும் வகையில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, ‘கல்வி சீர் வழங்கும் விழா’வை நடத்தினர். இதன்போது, பள்ளிக்கு வழங்கக் கூடிய பொருட்களை வாண வேடிக்கை, பட்டாசு, தாரை தப்படை முழங்க கிராமத்தைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துக்கொண்டு பள்ளி வளாகத்திற்கு வந்தனர்.

அங்கு நடைபெற்ற விழாவில், தாங்கள் கொண்டுவந்த பேனா, பென்சில், நோட்டு புத்தகங்கள், குடிநீர் டிரம், செம்பு பானைகள், டம்ளர், டேபிள், சேர், பெஞ்ச், மின்விசிறிகள், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் ஆசிரியர்களிடம் சீர்வரிசையாக வழங்கினர்.

சீர்வரிசை எடுத்து வந்த கிராம மக்களுக்கு, பன்னீர் தெளித்து, சந்தனம், குங்குமம் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்பு அளித்தனர்.

Hot Topics

Related Articles