முடிவெட்ட 20 ரூபா கட்டணம் கேட்ட சவரத் தொழிலாளிக்கு, 28 ஆயிரம் ரூபா வெகுமதி வழங்கி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள சம்பவம் ஒன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
நோர்வே நாட்டைச் சேர்ந்தவர் ஹரால்ட் பால்ட். சுற்றுலா செல்வதில் மிகுந்த ஆர்வம்கொண்ட இவர், பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக இந்தியா வந்துள்ள பால்ட், தற்போது குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் தங்கியுள்ளார்.
ஆமதாபாத்தின் புகழ்பெற்ற பகுதிகளைச் சுற்றிப்பார்த்த பால்ட்டின் கவனத்தை, அங்கு சாலையோரம் அமைந்திருந்த ஒரு சலூன் கடை ஈர்த்தது.
இதையடுத்து, அங்கு சென்று முடிவெட்டிக் கொள்ள விரும்பினார்.
‘முடிவெட்ட கட்டணம் எவ்வளவு..?’ என்று கேட்டதற்கு, ’20 ரூபா’ என பதிலளித்துள்ளார் சவரத் தொழிலாளியான உமேஷ்.

அதற்கு ஒத்துக்கொண்ட பால்ட், அந்த தொழிலாளியுடன் பேசிக்கொண்டே முடி திருத்தம் செய்துகொள்ள அமர்ந்தார்.
அப்போது, ‘முடிவெட்டுவதை வீடியோவாக எடுத்துக் கொள்ளலாமா..?’ என்று பால்ட் கேட்க, அவரும் சம்மதிக்க, முடிவெட்டும் காட்சி அனைத்தயும் வீடியோ எடுத்துள்ளார்.
அப்போது, உமேஷின் அணுகுமுறை, அவர் முடிதிருத்தும் நேர்த்தி, வாடிக்கையாளரிடம் கனிவாக நடந்துகொண்ட விதம் போன்றவைகளால் கவரப்பட்ட பால்ட், உமேஷுக்கு 400 அமெரிக்க டொலர்கள் (இந்திய மதிப்பில், 28 ஆயிரம் ரூபா) வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி, அவருடன் பல்வேறு கோணங்களில் செல்ஃபியும் எடுத்து அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.