மதுரையைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர், தான் வைத்திருந்த காரை விற்றுவிட்டு தினமும் சைக்கிளில் வைத்தியசாலைப்பு சென்று வருவது பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.


இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த நரம்பியல் வைத்தியர் மீனாட்சி சுந்தரம் (49). கடந்த 18 ஆண்டுகளாக மருத்துவப் பணியில் இருக்கும் இவர், ஆரம்பத்தில் ஏனைய வைத்தியர்களைப்போன்று காரில்தான் வைத்தியசாலைக்கு சென்று வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் இவருக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டதையடுத்து, இவருடைய நண்பர் ஒருவர் சைக்கிள் ஓட்டும்படி கூறியுள்ளார்.
இதையடுத்து, வழக்கமாக காரில் சென்று நடைபயிற்சி மேற்கொள்ளும் பூங்காவுக்கு சைக்கிளில் செல்லத் தொடங்கியுள்ளார். இதன் மூலம், மனதுக்கு புத்துணர்வு ஏற்படவே, வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க அருகில் உள்ள கடைகளுக்கும் சைக்கிளில் சென்றுவரத் தொடங்கியுள்ளார்.


இது, அவருடைய உடலுக்கு கூடுதல் புத்துணர்ச்சியைக் கொடுக்கவே, தினமும் வீட்டிலிருந்து தான் பணிபுரியும் வைத்தியசாலைக்கு சைக்கிளில் சென்று வருகிறார். அதுமட்டுமின்றி, நட்சத்திர ஹோட்டல்களில் நடக்கும் மருத்துவக் கருத்தரங்கு போன்றவைகளுக்கு சென்று வரவும் சைக்கிளையே பயன்படுத்துகிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது;

‘‘ஆரம்பத்தில், டவேரா காரில்தான் நான் வைத்தியசாலைக்கு சென்று வந்தேன். ஒருநாள், எனது நண்பரும் மதுரையைச் சேர்ந்த இருதய சிகிச்சை நிபுணருமான கண்ணன், ‘நீ குண்டாக இருக்கிறாய். தினமும் சைக்கிள் ஓட்டு. அதன் மூலம் எடை குறைவதுடன், உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது’ என்று அறிவுரை கூறினார்.

அத்துடன், 2015 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி அவரே ஒரு சைக்கிளும் வாங்கிக் கொடுத்தார். அன்று முதல் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தேன். சைக்கிளை உடற்பயிற்சிக்காக ஓட்டக்கூடாது ; கார் வைத்திருந்தால் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் வராது என்பதால் காரை விற்று விட்டேன். அதன்பிறகு, எங்கு போனாலும் சைக்கிள்தான்.

ஆரம்பத்தில், நான் சைக்கிளில் செல்வதை பார்த்து சிரித்தவர்கள், தற்போது என்னை வியந்து பாராட்டுகிறார்கள். அத்துடன், என்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மற்றும் எனது மருத்துவ நண்பர்கள் பலரும் தற்போது சைக்கிளுக்கு மாறி விட்டனர். சைக்கிளில் சென்றால் நிதானமாக பரபரப்பு இல்லாமல் வேலைக்குச் செல்ல முடிகிறது. தொலை தூரம் செல்ல வேண்டுமானால் கார் அல்லது இரு சக்கர வாகனம் ஏற்றது. நகரப் பகுதியில் சைக்கிள்தான் சிறந்த வாகனம்” என்று அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here