உலகம்

இலங்கை பாதுகாப்பு படைகளின் பிரதானிக்கு பாகிஸ்தான் இராணுவத்தின் உயரிய விருது

பாகிஸ்தானிய ஜனாதிபதி வைத்தியர் ஆரிப் அல்வியினால் இலங்கை பாதுகாப்புப் படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவிற்கு அந்நாட்டின் உயரிய இராணுவ விருதான நிஷின் ஐ-இம்தியாஸ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


இவ் விசேட விருது வழங்கல் நிகழ்வானது கடந்த புதன்கிழமை பாகிஸ்தானில் வைத்து வழங்கப்பட்டது.

பாகிஸ்தானிய கூட்டுப் படைகளின் பிரதானி ஜெனரல் சுபைர் மஹ்மூத் ஹயாத் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் என பாகிஸ்தானிய ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்பொழுது, இலங்கை பாதுகாப்புப் படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பாகிஸ்தானிய ஜனாதிபதி ஆரிப் அல்வியினை சந்தித்துக் கலந்துரையாடினார்.


இந்நிகழ்வில் உரையாற்றுகையிலே பாகிஸ்தானிய ஜனாதிபதி கடினமான தருணங்களில் ஆதரவுகளை வழங்கிய இலங்கையுடனான இருதரப்பு உறவுகளுக்கு பாகிஸ்தானிய அரசாங்கம் மிகுந்த முக்கியத்துவமளிப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

“ இருநாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகள் நெருங்கிய ஒத்துழைப்பு, புரிந்துணர்வு மற்றும் பரஸ்பர கௌரவம் ஆகியவற்றினால் அடையாளப்படுத்தப்படுகின்றது.

இலங்கையினை பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு பங்களிப்பு வழங்கும் மிக முக்கிய பிராந்திய நாடாகவே பாகிஸ்தான் கருதுகின்றது.

இருநாடுகளினதும் பன்முகத்தன்மையான இருதரப்பு உறவுகளில் பாதுகாப்புத் துறைசார்ந்த ஒத்துழைப்பு மிகமுக்கிய அம்சமாகக் காணப்படுகின்றது.


தனது பாதுகாப்பு நிறுவனங்களிலே இராணுவத்தினருக்கு பாரியளவிலான தொழில்வாய்ப்புக்களை வழங்கியதனூடாக, இலங்கை இராணுவத்தின் திறன்களை அபிவிருத்தி செய்வதிலே பாகிஸ்தான் பங்காளியாக செயற்பட்டுள்ளது.”

மேலும் பாகிஸ்தானின் கடற்படைப் பயிற்சியான அமான் -2019 யில் தங்களது உபகரணங்கள் மற்றும் பார்வையாளர்களுடன் கலந்துகொண்ட இலங்கை கடற்படையினருக்கு பாகிஸ்தானிய ஜனாதிபதி தனது பாராட்டுக்களை இதன்பொழுது தெரிவித்தார்.

கவாதார், கராச்சி” கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய துறைமுகங்களின் எதிர்கால இணைப்புக்கள் பிராந்திய தொடர்புகள் மற்றும் தனித்துவமான பொருளாதார நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.

பாகிஸ்தான் பௌத்த நாகரீகம் மற்றும் பாரம்பரியங்களின் தாயகமாக விளங்கியுள்ளது. பாகிஸ்தானிய அரசாங்கம் இலங்கையுடனான கலாசார மற்றும் சுற்றுலா துறை ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்காக பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என பாகிஸ்தானிய ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இலங்கைப் பாதுகாப்புப் படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தன்னை கௌரவப்படுத்தி வழங்கப்பட்ட விருதிற்காக, பாகிஸ்தானிய ஜனாதிபதி மற்றும் அந்நாட்டின் அரசாங்கத்திற்குத் தனது நன்றிகளை தெரிவித்தார். மேலும் இருநாடுகளிற்கிடையிலான இருதரப்பு உறவுகள் மென்மேலும் அபிவிருத்தியடையும் என இந்நிகழ்விலே நம்பிக்கை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Hot Topics

Related Articles