பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் பேணுவதை வலியுறுத்தி, முதலாம் வகுப்பு மாணவி மெகா பந்தில் அமர்ந்து யோகாசனம் செய்து அசத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ஹலோ அண்ணா கிட்ஸ் மற்றும் யுனிவர்சல் தொண்டு நிறுவனம் சார்பில் யோகா சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ரவிக்குமார் தலைமை வகித்தார். சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். முத்தானந்த சுவாமிகள் மடத்தைச் சேர்ந்த ஸ்ரீல சொரூபானந்த சுவாமிகள் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதில், இயற்கையை பாதுகாக்க வேண்டும், பொலித்தின் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும், உடல் ஆரோக்கியம் பாதுகாக்க யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி, முதலாம் வகுப்பில் படிக்கும் 6 வயது மாணவி பிரசிதா என்பவர் மெகா சைஸ் பந்து மீது அமர்ந்து யோகாசனம் செய்தார்.
முதலில், பத்மாசனத்தில் தொடங்கிய மாணவி, பின்னர் பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தினார்.
இந்நிகழ்ச்சியில், ஹலோ கிட்ஸ் பள்ளி இயக்குநர் சதீஷ்பிரபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். யோகா ஆசிரியர் லட்சுமணன் வாழ்த்தி பேசினார். யுனிவர்சல் ஆசிரியர் கவிதா பிரபா வரவேற்றார். செல்வ ஜோதிமீனா நன்றி கூறினார்.