அறிமுக இயக்குநர் கதிர் இயக்கத்தில் உருவாகிவரும் பெயரிடப்படாத படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை நிக்கி கல்ராணி நடிக்கிறார்.
அண்மையில் வெளியாகி பெரிய வெற்றிப் பெற்ற சார்லி சாப்ளின் = 2 படத்தில் இடம்பெற்ற சின்ன மச்சான் என்ற பாடல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை நிக்கி கல்ராணி.
அவருக்கு இந்த ஆண்டின் தொடக்கமே வெற்றிகரமாக அமைந்துவிட்டது. சார்லி சாப்ளின்=2 படத்தைத் தொடர்ந்து அவர் ‘கிராமத்து நாயகன் ’ சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
சுந்தர் சியிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் கதிர். அவர் இயக்குநராக அறிமுகமாகும் பெயரிடப்படாத படத்தில் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் கதிர் பேசுகையில்,
‘ இது ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர். இதில் முப்பதிற்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
விஜயகுமார், நிரோஷா,ராதாரவி, தம்பி ராமையா,ரேகா, சுமித்ரா, சதீஷ், யோகி பாபு என நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கிறார்கள். இதில் சசிகுமார் ஐடியில் பணிபுரிபவராக நடிக்கிறார்.
பொள்ளாச்சி, மலேசியா ஆகிய இடங்களில் படமாக்க திட்டமிட்டிருக்கிறோம். சாம் சி எஸ் இசையமைக்க, சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார்.” என்றார்.
இதனிடையே நடிகர் சசிகுமார் நாடோடிகள் =2, என்னை நோக்கி பாயும் தோட்டா, கென்னடி கிளப், கொம்பு வெச்ச சிங்கம்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.