உலகம்

திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயில் மாசித் திருவிழா

திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.


அறுபடை வீடுகளில் ஒன்றான, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் மாசித்திருவிழா, இன்று (10ம் திகதி) காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

இதையொட்டி இன்று (10ம் திகதி) நள்ளிரவு 1 மணிக்கு கோயிலின் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, கொடிப்பட்டம் பூஜை செய்யப்பட்டு கோயிலைச் சுற்றி வலம் வந்தது.


இதையடுத்து நடந்த சிறப்பு பூஜைகளுக்கு பின்பு, அதிகாலை 5 மணிக்கு மேல் மகர லக்கனத்தில் கொடியேற்றப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று தொடங்கிய திருவிழா, எதிர்வரும் 21ம் திகதி வரை 12 நாட்கள் வெகு கோலாகலமாக நடைபெறுகிறது.

புகழ்மிக்க மாசித் திருவிழாவின் 7ம் திருநாளான எதிர்வரும் 16ம் திகதி அதிகாலை 5 மணிக்கு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சியும், தொடர்ந்து சுவாமி ஆறுமுக நயினாா் சண்முக விலாசத்திலிருந்து வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருள்வதும் நடைபெறும்.


அதனைத் தொடர்ந்து, தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தியும், வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தியும், பச்சை கடசல் சப்பரத்தில் பச்சை சாத்தியும் சிறப்பு சப்பர பவனி நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நிகழ்ச்சி 19ம் திகதியும், தெப்பத் திருவிழா 20ம் தேதியும் நடைபெறுகிறது.

Hot Topics

Related Articles