உலகம்

8 ஆண்டுகளாக 9 பேர் திருடிய 80 வாகனங்கள் மீட்பு..!

எட்டு ஆண்டுகளாக வாகனங்களை திருடி, அவைகளை வெளிமாநிலங்களில் விற்பனை செய்த 9 பேர் கொண்ட கும்பலை பொலிஸார் கைது செய்தனர்.


மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் தானே ராபோடி பகுதியில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வேன் ஒன்று காணாமல் போனது.

இதுபற்றி அதன் உரிமையாளர் ராபோடி பொலிஸில் புகார் செய்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பொலிஸார், அந்த சரக்கு வேனில் இருந்த ஜிபிஎஸ் தொழில் நுட்ப உதவியுடன் தேடி வந்தனர்.

அப்போது, புனேயில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் அந்த வேன் நிற்பது தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்ற பொலிஸார், வேனை வைத்திருந்தவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, மும்பையைச் சேர்ந்த வினித் ரத்தன், சந்தீப் ஆகியோரிடம் வேனை வாங்கியதாக தெரிவித்தார். இதையடுத்து பொலிஸார், வினித் ரத்தன் மற்றும் சந்தீப் ஆகியோரை கைது செய்தனர்.


அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த வாகன திருட்டில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த மேலும் 7 பேருக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் மும்பை, புனே, நாசிக், நவிமும்பை போன்ற இடங்களில் வாகனங்களைத் திருடி, போலி பதிவெண் மற்றும் சான்றிதழ் தயாரித்து, அந்த வாகனங்களை ராஜஸ்தான், கர்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, இந்த வாகன திருட்டில் தொடர்புடைய கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்த சாதிக் மேகபூப், அல்டாப் அப்துல்கானி, ராஜஸ்தானைச் சேர்ந்த மங்கிலால், ராம்பிரசாத், உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்கட்டை பகுதியைச் சேர்ந்த ஜாவேத் முக்தார், அல்இக்பால், முகமது யூசுப் ஆகிய 7பேரை பொலிஸார் கைது செய்தனர்.

இந்தக் கும்பல், கடந்த 8 ஆண்டுகளாக வாகனங்களை திருடி விற்று வந்துள்ளது. இவர்களிடம் இருந்து கார், சரக்கு வேன் உள்ளிட்ட 80 வாகனங்களை பறிமுதல் செய்த பொலிஸார், 9 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் மதிப்பு 3 கோடியே 40 லட்சம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர்.

 

Hot Topics

Related Articles