பின்பக்கம் வழியாக வீட்டிற்குள் நுழைந்து கட்டிலின் அடியில் பதுங்கியிருந்த சிறுத்தையால், இந்தியாவின் பந்தலூர் பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா பாட்டவயல் அருகேயுள்ள வீட்டிப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராயன் (70). இவர், கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் வெளியூர் சென்றார்.
இந்நிலையில், கடந்த 5 ஆம் திகதி மதியம் 12 மணிக்கு கணவன், மனைவி இருவரும் வீடு திரும்பினர்.
முன்பக்க கதவை திறந்தபோது, வீட்டுக்குள் இருந்து உறுமல் சத்தம் கேட்டுள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ராயன், ஒவ்வொரு அறையாகச் சென்று பார்த்துள்ளார். அப்போது, கட்டிலின் அடியில் சிறுத்தை ஒன்று பதுங்கி இருந்துள்ளது. இதனால் பீதி அடைந்த ராயனும் அவருடைய மனைவியும் பயத்தில் கூச்சலிட்டபடி வெளியே ஓடிவந்தனர்.
பின்னர் அவர்கள், வீட்டின் கதவை இழுத்து மூடினர். இதனால், சிறுத்தை வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, வனத்துறை மற்றும் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர்கள், சிறுத்தை பதுங்கி இருந்த வீட்டின் அருகே பொதுமக்கள் யாரும் செல்லாதபடி பார்த்துக்கொண்டனர். பின்னர், கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடித்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது;
“இந்த சிறுத்தைக்கு 3 வயது இருக்கும். அந்த வீட்டின் பின்பக்க சுவரில் ஒரு துளை உள்ளது. அதன் வழியாகத்தான் சிறுத்தை வீட்டிற்குள் நுழைந்துள்ளது. சிறுத்தையை பிடிக்க வீட்டின் வாசலில் கூண்டு வைக்கப்பட்டது. ஊழியர்கள் அந்த வீட்டின் கதவை திறந்தவுடன் சிறுத்தை வெளியே ஓடிவந்தபோது கூண்டில் சிக்கிக் கொண்டது. பிடிபட்ட சிறுத்தை, வனப்பகுதியில் பத்திரமாக விடப்படும்” என்று தெரிவித்தனர்.
வீட்டிற்குள் சிறுத்தை நுழைந்து கட்டிலின் அடியில் பதுங்கியிருந்த சம்பவத்தால், பந்தலூர் பகுதி மக்களிடையே பரப்பரப்பு ஏற்பட்டது.