உலகம்

பிளே ஸ்டோரில் இருந்து செயலிகளை நீக்கி கூகுள் அதிரடி

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பல்வேறு பியூட்டி செயலிகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த செயலிகள் பயனர் விவரங்களை தவறாக கையாண்டதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.


கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் பல்வேறு பியூட்டி கேமரா செயலிகள் தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்ட விளம்பர சேர்வர்களுடன் தொடர்பு கொண்டிருப்பதாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இவற்றில் சில செயலிகள் அதிகளவு பிரபலமானதால் பல லட்சம் பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். இவ்வாறு டவுன்லோடு செய்தவர்களில் பலர் ஆசியாவில் வசிக்கின்றனர்.

இதுபோன்று பிரச்சனைகளை ஏற்படுத்தும் செயலிகளை கண்டறிவது வாடிக்கையாளர்களுக்கு கடினமான விஷயம் ஆகும். இந்த செயலிகள் இன்ஸ்டால் ஆனதும் இவை பயனர் ஸ்மார்ட்போனில் ஷார்ட்கட் ஒன்றை உருவாக்கி அதனை மறைத்து வைத்துவிடும். செயலி மறைக்கப்பட்டிருப்பதால் இவற்றை பயனரால் கண்டறியவே முடியாது. மேலும் இவை பேக்கர்களை பயன்படுத்தி எவ்வித பாதுகாப்பு வலையிலும் சிக்காத வகையில் உருவாக்கப்படுகின்றன.

இதுதவிர இந்த செயலிகள் பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் முழு ஸ்கிரீனை மறைக்கும் வகையில் விளம்பரங்களை வெளியிடும். இவற்றில் பல்வேறு விளம்பரங்கள் பயனரின் பிரவுசர் வழியே திறக்கும்படி உருவாக்கப்பட்டிருக்கும். இந்த விளம்பரங்கள் பயனருக்கு தீங்கு ஏற்படுத்தும் நோக்கில் இருக்கும். இடையூறை ஏற்படுத்தும் செயலி மறைந்திருப்பதால், வாடிக்கையாளர்களால் எங்கிருந்து விளம்பரங்கள் வருகின்றன என்பதையே கண்டறிய முடியாது.

பெரும்பாலும் இதுபோன்ற செயலிகள் தீங்கிழைக்கும் வலைதளங்களை திறக்கச் செய்து அவற்றின் மூலம் பயனரின் தனிப்பட்ட விவரங்கள், முகவரி அல்லது மொபைல் போன் விவரங்களை சேகரிக்கும். இந்த செயலிகள் ரிமோட் சேர்வெர்கள் அல்லது வெளிப்புற இணைய முகவரிகளில் இருந்து டவுன்லோடு ஆகி விளம்பரங்களை இயக்க ஆரம்பிக்கும்.

முதற்கட்ட ஆய்வில் போட்டோ ஃபில்ட்டர் சேவைகளை வழங்கும் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து கண்டறியப்பட்டன. இந்த செயலிகள் பிரத்தியேக சேர்வெர் மூலம் பயனர் புகைப்படங்களை அழகுப்படுத்துகின்றன. எனினும், அழகுபடுத்தப்பட்ட புகைப்படத்துன் போலி விவரங்களும் சேர்ந்து வரும்.

செயலியில் அப்லோட் ஆன புகைப்படங்கள் தவறாக பயன்படுத்தப்படும். எனினும், கூகுள் சார்பில் இந்த செயலிகளை முடக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

Hot Topics

Related Articles