உலகம்

பாப்பரசர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரலாற்று சிறப்புமிக்க பயணம்

பாப்பரசர் பிரான்சிஸ் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை மேற்கொண்டுள்ளார்.


கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமையகம் வத்திக்கானில் உள்ளது. இதன் தலைவராக பாப்பரசர் உள்ளார். அமீரகத்தில் இந்த (2019) ஆண்டு சகிப்புத்தன்மைக்கான ஆண்டாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் மத நல்லிணக்க கூட்டத்தில் கலந்துகொள்ள பாப்பரசர் பிரான்சிசுக்கு அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட பாப்பரசர் ஐக்கிய அரபு அமீரக மக்களுக்கு செய்தி ஒன்றை வெளியிட்டார்.

அச் செய்தியில் “மதங்களுக்கு இடையிலான உறவின் வரலாற்றில், ஒரு புதிய பக்கத்தில் உங்களின் நேசமிக்க தேசத்தில் எழுதுகிறேன். நாம் வேறுவேறாக இருந்தாலும் சகோதரர் கள்தான்” என தெரிவித்தார்.

அந்த வகையில் வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று முன்தினம் தொடங்கினார். வத்திக்கானில் இருந்து விமானத்தில் புறப்பட்ட அவர் அபுதாபி விமான நிலையத்தை சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான், பாப்பரசர் பிரான்சிசை நேரில் வரவேற்றார்.

நேற்று காலை பாப்பரசர் பிரான்சிஸ் முஸ்லிம் மதத் தலைவர்களை சந்தித்து பேசினார். அதனைத்தொடர்ந்து அவர் அரண்மனைக்கு சென்று அரச குடும்பத்தினரை சந்தித்தார். அப்போது அவருக்கு அரண்மனை வாயிலில் துப்பாக்கி குண்டுகள் முழங்க பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் மத நல்லிணக்க கூட்டத்தில் பாப்பரசர் பிரான்சிஸ் பங்கேற்கிறார். அதனை தொடர்ந்து அங்குள்ள ஒரு மைதானத்தில் சிறப்பு பிரார்த்தனை (திருப்பலி) நடத்துகிறார். இதில் சுமார் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்த பயணத்தின் போது பாப்பரசர் பிரான்சிஸ், ஏமன் உள்நாட்டு போர் குறித்து ஐக்கிய அரபு அமீரக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனெனில் அவர் ஐக்கிய அரபு அமீரக பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக ஏமன் போர் குறித்து மிகுந்த கவலை தெரிவித்திருந்தார்.

இது பற்றி அவர் கூறுகையில், “ஏமனில் நடைபெறும் நீண்டகால உள்நாட்டு போரில் அந்நாட்டு மக்கள் தொகையில் பெரும்பகுதியினர் அழிந்துவிட்டனர். குழந்தைகள் உணவு இல்லாமல் தவிக்கின்றனர். அவர்களின் அழுகை சத்தம் இறைவனை சென்றடைந்துள்ளது. எனவே இதற்கு உடனடி தீர்வுகாண அனைத்து தரப்பினரையும் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்தார்.

ஏமனில் நடந்து வரும் உள்நாட்டு போரில் அரசுக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுபடையில் ஐக்கிய அரபு அமீரகம் அங்கம்வகிப்பது குறிப்பிடத்தக்கது.

 

Hot Topics

Related Articles