உலகம்

இலங்கை மக்களுக்கு சுதந்திரதின வாழ்த்துக்கள் : இன்று 71 ஆவது சுதந்திரதினம்

இலங்கைத் திருநாடானது இன்று ( 04.02.2019) 71 ஆவது தேசிய சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றது.

அந்தவகையில் இலங்கையில் வாழும் அனைத்து மத, இன மக்களுக்கும் சுதந்திரதின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அடுத்த சுதந்திர தினத்தில் நீதிக்காகவும் காணி உரிமைக்காகவும் அடிப்படைச் சம்பள உயர்வுக்காகவும் போராடும் அடிநிலை மக்களின் உரிமைகள் கிடைக்கப்பெற்று ஒரு முழுமையான சுதந்திரதினத்தைக்கொண்டாட இலங்கைத்தாயின் அனைத்து பிள்ளைகளும் ஒன்றாக பாடுபடுவோம்.

கடந்த 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி பிரித்தானியாவின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இலங்கை இன்று போல் ஒரு நாளில் சுதந்திரக் காற்றை சுவாசித்தது.

தனித்துவமான வரலாற்றைக் கொண்ட இலங்கையை, தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர வேறு இராஜ்ஜியங்கள் பல தடவைகள் முயற்சிகளை மேற்கொண்டன.

ஆரம்பத்தில் போர்த்துகேயர்களும், மற்றுமொரு தடவை ஒல்லாந்தரும் என இலங்கையை அடிமைப்படுத்த முயற்சி செய்தன.

1505 ஆண்டு நவம்பர் மாதம் போர்த்துக்கேய கொடிகளுடன் கப்பல்கள் கொழும்பு கடலில் நங்கூரமிட்டன.

பல நூறாண்டு காலமாக ரம்மியமான இந்த தீவின் கௌரவமான சுதந்திரத்தை முடிவிற்கு கொண்டு வருவதாக இந்த கப்பல்களின் வரவு அமைந்தது.

கொழும்பிலுள்ள கற்பாறைகளில் தனது மன்னரின் சுவட்டை பதித்து இந்த நாட்டின் இறையாண்மைக்கு, லொரொன்சோ டி அல்மேதா, துரதிர்ஷ்ட வசமான அடையாளத்தை இட்டுச் சென்றார்.

1517 ஆம் ஆண்டில் மீண்டும் வந்த போர்த்துக்கேயர் இலங்கையின் கரையோர பிரதேசங்களின் அதிகாரத்தை தம்வசப்படுத்திக்கொண்டார்கள்.
ஒரு நூற்றாண்டிற்கும் அதிகமான காலமாக தனது அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொண்ட போர்த்துக்கேயருக்கு, 1655 செப்டெம்பர் மாதம் ஜெராட் ஹல்ப் தலைமையிலான ஒல்லாந்தர் ஆக்கிரமிப்பினால் சவால்களை சந்திக்க நேர்ந்தது.

அன்று ஆரம்பித்த ஒல்லாந்தர் யுகத்தை முடிவிற்கு கொண்டு வந்து கிறிஸ்துவுக்கு பின் 1796 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் நாட்டை ஆக்கிரமித்து அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.

ஒல்லாந்த கோட்டைகளில் கூலிப்படையாக செயற்பட்ட மியுரொன் படையணியின் ஒத்துழைப்புகளை பணத்திற்கு பெற்று கொண்ட ஆங்கிலேயர் முதலாவதாக கரையோர பகுதிகளின் அதிகாரத்தை கைப்பற்றினார்கள்.

ஆனால் இந்து சமுத்திரத்தின் முத்தான இந்த தீவினை முழுமையாக ஆக்கிரமிப்பது பிரித்தானியர்களுக்கு எளிதான ஒன்றாக அமையவில்லை.

அந்த முழு அளவிலான அதிகாரத்திற்கு தலதா மாளிகையின் ஆக்கிரமிப்பு அவசியம் என்பது சம்பிரதாயம் , அதே போன்று கண்டி ராசதானியின் போர் தந்திரங்கள் என்பன அவர்களின் எதிர்பார்ப்பிற்கு சவாலாக காணப்பட்டன.

ஆனால் ஆங்கிலேயர் ஆட்சியின் முக்கிய விடயமான பிரித்தாளும் தந்திரத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு நாயக்கர் இன மன்னருக்கும் உயர் குலத்தினருக்கும் இடையில் காணப்பட்ட கருத்து முரண்பாடுகளை சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர்.

ஏஹலேபொல மஹா நிலமேயின் ஒத்துழைப்பை மிகவும் தந்திரமாக தம்வசப்படுத்திக்கொண்ட ஆங்கிலேயர்கள் கண்டி ராசதானியைக் கைப்பற்றி 1815 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி ஒப்பந்தத்தின் ஊடாக நாட்டின் உரிமையை பெற்று கொண்டனர்.

ஆங்கிலேயே ஆட்சியில் பல்வேறு இன்னல்களை சந்தித்து அதிலிருந்து மீள் எழுவதற்கு 1818 ஆம் ஆண்டு கிளர்ச்சி காரணமாக இருந்தது.

உயர் குலத்தினருக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்தி வீர மொனரவில கெப்பெட்டிபொல உட்பட 1818 ஆம் ஆண்டு சுதந்திர போராட்டத்தின் தலைவர்களை கொலை செய்து ஆங்கிலேயர்கள் மீண்டும் அதிகாரத்தை உறுதிப்படுத்தி கொண்டனர்.

1848 ஆம் ஆண்டு கொங்காலே கொட பண்டா, வீரபூரன் அப்பு தலைமையில் மாத்தளை கிளர்ச்சி இரண்டாவது சுதந்திர தின போராட்டமாக முன்னெடுக்கப்பட்ட போதும் அதனையும் தந்திரமாக ஆங்கிலேயர்கள் முறியடித்தனர்.

ஆயுத போராட்டத்திற்கு பதிலாக 1917 ஆம் ஆண்டில் இலங்கை தேசிய சங்கத்தை அமைத்து அரசியல் ரீதியிலான போராட்டம் மற்றும் அநகாரிக தர்மபாலவின் சமூக வழிக்காட்டல்கள் சுதந்திர போராட்டத்திற்கு புதிய வலுவை சேர்த்தன.

இந்த அரசியல் சுதந்திர போராட்டத்திற்கு தலைமைத்துவம் வழங்கிய டி.எஸ். சேனாநாயக்க உள்ளிட்ட சிங்கள தலைவர்கள் போன்றே பொன்னம்பலம் உள்ளிட்ட தமிழ், முஸ்லிம் தலைவர்களும் சுதந்திர போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்தனர்.

இறுதியில் 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி பிரித்தானியாவின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இலங்கை சுதந்திரக் காற்றை சுவாசித்தது.

இந்நிலையில், இலங்கையின் 71 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு காலிமுகத்திடலில் சற்றுநேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

6 ஆயிரத்து 454 பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பும் 850 கலை,கலாசார நடனக்கலைஞர்களின் கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதுடன் இன்றைய சுதந்திர தின நிகழ்வுகளின் சிறப்பு அதிதியாக மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சாலி மற்றும் அவரது பாரியாரும் கலந்துகொள்கின்றனர்.

இலங்கையின் 71 ஆவது தேசிய சுதந்திர தினமான இன்று நாடு பூராகவும் பல்வேறு கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் கடந்த 2 ஆம் திகதியில் இருந்தே சர்வமத ஆசிபெறும் நிகழ்வுகள் நாடு பூராகவும் இடம்பெற்று வருகின்றது.

தேசிய தின வைபவத்தை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்று முன்தினம் முழுநாள் பிரித் பாராயண வழிபாட்டு நிகழ்வு இடம்பெற்றிருந்தன. நேற்று முன்தினம் இரவு 9 மணி தொடக்கம் நேற்று அதிகாலை வரையில் இவ்வாறான ஆசி நிகழ்வுகள் இடம்பெற்றன.

அதேபோல் இந்து, கத்தோலிக்க, இஸ்லாமிய ஆலயங்களிலும் வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இன்று காலை சுதந்திர தின நிகழ்வுகளுக்கு முன்னதாக கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவின் உருவச் சிலைக்கு இன்றைய தினம் மலர் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

இன்று காலை 7 மணிக்கு இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். அதனை தொடர்ந்து காலை 8 மணிக்கு கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் இலங்கையின் 71 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் அரசாங்கத்தின் சகல உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பாராளுமன்றத்தின் சகல எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும், அரச அதிகாரிகள் மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், முப்படை தளபதிகள், பாதுகாப்பு படைகளின் பிரதானி, பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளின் இரண்டாம் நிலை அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.

சிறப்பு அதிதி

இன்றைய சுதந்திர தினத்தின் விசேட அதிதியாக மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சாலி மற்றும் அவரது பாரியாரும் கலந்துகொள்ளவுள்ளனர். சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் நோக்கில் மாலைதிவு ஜனாதிபதி மற்றும் அவரது பாரியார் நேற்று காலை கட்டுநாயகா விமானநிலையத்தை வந்தடைந்தனர். அவரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்க பிரதிநிதிகள் வரவேற்றனர்.

இரு மொழிகளில் தேசியகீதம்

இம்முறையும் வழமைபோன்று தேசிய கீதம் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தமிழ், முஸ்லிம், சிங்கள, பாடசாலைகளின் மாணவ, மாணவிகளால் இசைக்கப்படவுள்ளது. அத்துடன் ஜயமங்களகாதாவும் இசைக்கப்படவுள்ளது.

தேசிய கோடியை பறக்கவிடவேண்டும்

இம்முறை தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு காலிமுகத்திடல் உட்பட அதனை அண்டிய பிரதேசம் எங்கும் தேசியக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. அத்துடன் சுதந்திரதினமான இன்றில் இருந்து ஒரு வாரத்திற்கு நாட்டில் சகல பிரதேசங்களிலும் வீடுகளில் மக்கள் தேசிய கோடியை பறக்கவிட்டு தேசிய உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என அரசாங்கம் சகலருக்கும் அறிவித்துள்ளது.

இராணுவ அணிவகுப்பு நிகழ்வுகள்

மேலும் வழைமைபோல் இம்முறையின் தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் இலங்கை முப்படையின் அணிவகுப்புகள், கண்காட்சி நிகழ்வுகள் மற்றும் சாகல நிகழ்வுகள் அரங்கேறவுள்ளது. இதற்கான கடந்த சில தினங்களாகவே இலங்கை பாதுகாப்பு படையினர் ஒத்திவைப்பு நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தனர்.

இம்முறை பாதுகாப்பு அணிவகுப்பு நிகழ்வுகளுக்கான 3872 இராணுவ வீரர்கள், 891 கடற்படை வீரர்கள், 907 விமானப் படைவீரர்கள், 600 பொலிஸார், 523 பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர், 596 சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் 100 தேசிய இளைஞர் படையினர் இந்த தேசிய தின மரியாதை அணிவகுப்பில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். அவற்றுடன் யுத்தத்தின் போது அங்கவீனமுற்ற முப்படை வீரர்களும் வாகனங்கள் மற்றும் சக்கர நாற்காலிகளில் அமர்ந்தவாறு அணிவகுத்துச் செல்லவுள்ளனர்.

அத்துடன் இராணுவ அணிவகுப்பின் போது இராணுவம் ஆயுதங்கள், கனரக கவச வாகனங்கள், யுத்த தளபாடங்கள், உபகரணங்கள், ஆட்லறி, பீரங்கி தாங்கிய வாகனங்கள், மோப்பநாய்கள், பொறியியல் உபகரணங்கள் உட்பட யுத்தகாலத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயத தளபாடங்கள், உபகரணங்களும் பயன்படுத்தப்படவுள்ளதுடன் பொதுமக்கள் அவற்றை வேடிக்கை பார்க்கக்கூடிய வகையில் பொது அணிவகுப்பு நிகழ்வுகளும் இடம்பெறும்.

விமானப் படையினரின் கபீர், கே 8, எப் 7 ரக தாக்குதல் விமானங்களும் சி 130, வை 12, பிரி 6 ரக விமானங்கள் மற்றும் பெல் 412, பெல் 212 எம்ஐ 17 ரக ஹெலிகொப்டர்களுமே சாகசங்களை காண்பித்தவாறு செல்லவுள்ளன. கடற்படையின் பிரதான 16 ரோந்துக்கப்பகளும் அண்மையில் சர்வதேச நாடுகளிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட யுத்த கப்பல்களும் ஏனைய சிறு ரக படகுகளும் கடற்படையின் அணிவகுப்பில் இடம்பெறும்.

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை

இன்றைய தினம் தேசிய தின நிகழ்வுகளில் நாட்டின் தேசியக் கொடியை சம்பிரதாய முறையில் ஜனாதிபதி ஏற்றியவுடன் அணிவகுப்பு நிகழ்வுகளை அடுத்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விஷேட உரை நிகழ்த்தவுள்ளார்.

வீதிகள் பூட்டப்படும்

சுதந்திர தினத்தை முன்னிட்டு காலிமுகத்திடலை அண்மித்த வீதிகளில் இன்று நண்பகல் 12 மணிவரை பூட்டப்படும். காலிமுகத்திடல் சுற்றுவட்டம் முதல் பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் வரையிலும் சைத்திய வீதியூடாகவும் வாகனங்கள் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வாகனங்கள் கொள்ளுப்பிட்டி சந்தியால் காலிமுகத்திடல் நோக்கி பிரவேசிப்பதற்கும், சென். மைக்கல்ஸ் வீதியால் காலிமுகத்திடல் நோக்கிப் பயணிப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இருப்பினும் இன்று நண்பகல் 12 மணியுடன் கொழும்பில் வீதிப்போக்குவரத்து வழைமைக்கு திரும்பும்.

 

Hot Topics

Related Articles