அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் கர்ப்பிணி சாரதியொருவர், பயணி ஒருவரால் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் அரிசோனா மாநிலம் போனிக்ஸ் நகரில் உள்ள லிப்ட் நிறுவனத்தில் கார் ஓட்டுனராக கிறிஸ்டியானா ஹொவாடோ (39) என்ற பெண் வேலை பார்த்தார்.
இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மீண்டும் கருவுற்றிருந்த அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு பயணியை காரில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.
டெம்ப் பகுதியில் சென்றபோது காருக்குள் இருந்த பயணி, கிறிஸ்டியானா ஹொவாடோ கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளார். கருவில் இருந்த குழந்தையும் உயிரிழந்தது. பின்னர் ஹொவாடொவின் காரையும் எடுத்துச் சென்றுள்ளார்.
இதுதொடர்பாக டெம்ப் பொலிசார் வழக்குப்பதிவு செய்து பேபியன் டுராசோ என்ற 20 வயது இளைஞரை கைது செய்துள்ளனர்.
இதுபற்றி டெம்ப் பொலிஸ் நிலைய செய்தித் தொடர்பாளர் ரொனால்ட் எல்காக் கூறுகையில்,
“இதுபோன்ற மனதை பாதித்த பல சம்பவங்களை பொலிஸ் அதிகாரிகள் சந்தித்துள்ளனர். இந்த சம்பவமும் அதேபோல் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என கூறினார்.
இதனையடுத்து லிப்ட் நிறுவனத்தார் தெரிவிக்கையில்,
‘இந்த சம்பவம் தெரிந்ததும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானோம். உயிரிழந்த ஹொவாடோவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை நினைத்து மிகவும் வருந்துகிறோம். லிப்ட் நிறுவனத்தின் ஊழியர்களின் பாதுகாப்பே எங்கள் முக்கிய நோக்கமாகும். அந்த நபரின் கணக்கை நீக்கிவிட்டோம். மேலும் இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்’ என கூறினர்.
இந்நிலையில் கர்ப்பிணி சாரதியை கொலை செய்த டுசாரோ கலிபோர்னியாவை சேர்ந்தவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. வாகன கடத்தல், கொலை உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.