உலகம்

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் தமிழ் பெண்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ், வேட்பாளர் தேர்தலுக்காக ஜனநாயக கட்சியினரிடையே பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார்.


அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2020) நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெவுள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட தயாராக இருப்பதாக இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ் கடந்த வாரம் அறிவித்தார்.

சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர், ஜனநாயகக் கட்சி சார்பில் கலிபோர்னியா மாகாணத்தில் போட்டியிட்டு செனட்சபை உறுப்பினரானவர். கலிபோர்னியா மாகாணத்தில் அரசு வக்கீலாக பதவி வகித்த கமலா ஹாரிஸ், ஜனாதிபதி டிரம்ப் கொள்கைகளுக்கு எதிரானவர்.

கமலா ஹாரிசுக்கு அவரது கட்சியில் மிகுந்த செல்வாக்கு இருப்பதாக கருதப்படுகிறது. அவர், அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் தான் இருப்பதாக அறிவித்த 24 மணி நேரத்தில் 15 இலட்சம் அமெரிக்க டொலரை நன்கொடையாக பெற்றார்.

ஜனநாயக கட்சி வேட்பாளராவதற்கான போட்டியில் கமலா ஹாரிஸ் தவிர, எலிசபெத் வாரன், கிர்ஸ்டன் கில்லிபேண்ட், துளசி கப்பார்ட் என மேலும் 3 பெண்கள் களத்தில் இருக்கிறார்கள்.

ஜனநாயக கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பமாகின்றது, ஜூலை மாத இறுதியில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.

தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர் நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் டிரம்பை எதிர்த்து போட்டியிடுவார்.


இந்த நிலையில் வேட்பாளர் தேர்தலுக்காக ஜனநாயக கட்சியினரிடையே கமலா ஹாரிஸ் தனது பிரசாரத்தை ஆரம்பித்தார். கலிபோர்னியா மாகாணத்தின் ஓக்லாந்தில் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் அவர் உரையாற்றினார்.

அப்போது ஜனாதிபதி டிரம்பின் கொள்கைகளை கடுமையாக சாடினார். பிரசாரத்தில் கமலா ஹாரிஸ் பேசியதாவது:-

நான் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறேன். ஏனென்றால் நான் எனது நாட்டை விரும்புகிறேன். மக்களால் ஜனாதிபதியாக விரும்பும் நான் மக்களுக்கான ஜனாதிபதியாக இருப்பேன்.

எவரையும் எதிர்க்கும் திறன் என் அம்மாவிடம் இருந்து எனக்கு கிடைத்தது. அவர் எப்போதும் என்னிடம் “தவறுகளை கண்டால், குறை சொல்லிக்கொண்டு மட்டும் இருக்காதே. அதற்கு தீர்வு காண ஏதாவது செய்” என்று செல்வார்.

பதவியில் இருப்பவரை எதிர்த்து போட்டியிடுவது என்பது சவாலான விஷயம் தான். வருகிற ஜனாதிபதி அவ்வளவு எளிதாக அமையப்போவதில்லை என்பதை நாம் அறிவோம்.

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் ஜனநாயகம் தாக்குதலுக்குள்ளாகி இருக்கிறது. டிரம்பின் மெக்சிகோ எல்லை சுவர் திட்டம் போலித்தனமானது. அவரது வெளியுறவு கொள்கையால் உலக அளவில் அமெரிக்காவின் நிலைமை மிகவும் பலவீனம் அடைந்துள்ளது.
அமெரிக்கா மக்களின் கனவுகளை நாம் மீட்டெடுக்க வேண்டும்.

அமெரிக்காவின் தார்மீக தலைமை பொறுப்பை நாம் மீண்டும் கொண்டு வருவோம் என அவர் தொடர்ந்தும் பேசினார்.

 

Hot Topics

Related Articles