தெற்கு பிலிப்பைன்ஸ் ஜோலோ தீவில் கத்தோலிக்க தேவாலயத்தை குறிவைத்து தாக்கப்பட்ட குண்டு வெடிப்பில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிலிப்பைன்சில் உள்ள ஒரு தேவாலயத்தில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பில் சிக்கி 27 பேர் பலியாகினர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சூலு மாகாணத்தில் அபு சாயப் என்கிற பயங்கரவாத இயக்கம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள், ஆட்களை கடத்தி படுகொலை செய்வது மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளில் குண்டுவெடிப்புகளை மேற்கொள்வது போன்ற நாச வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவர்களின் அட்டகாசத்தை ஒடுக்க பிலிப்பைன்ஸ் இராணுவவீரர்கள் போராடி வருகிறார்கள்.
இந்த நிலையில், சூலு மாகாணத்தின் தலைநகர் ஜோலோவில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிரார்த்தனை இடம்பெற்றது.
இதற்காக ஏராளமான கிறிஸ்தவர்கள் தேவாலயத்தில் திரண்டிருந்தனர்.
அவர்கள் அனைவரும் மனமுருகி பிரார்த்தனையில் கலந்துகொண்டிருந்தபோது, சற்றும் எதிர்பாராத வகையில் தேவாலயத்துக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. தேவாலயத்துக்குள் இருந்த அனைவரும் மரண ஓலமிட்டனர். உயிரை காப்பாற்றிக்கொள்ள அலறியடித்தபடி தேவாலயத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர்.
இதனால் அந்த இடம் போர்க்களமாக காட்சியளித்தது. அதே சமயம் குண்டு வெடிப்பில் சிக்கி பலியான சிலரின் உடல் பாகங்கள் சிதறிக்கிடந்தன.
மேலும் பலர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
குண்டு வெடிப்பு குறித்த தகவல் கிடைத்ததும் பாதுகாப்புபடை வீரர்கள் மற்றும் பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த தேவாலயத்தை சுற்றி வளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் படுகாயமடைந்த நபர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர். அப்போது தேவாலய வளாகத்துக்குள் மற்றொரு குண்டு வெடித்து சிதறியது. இதில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படைவீரர்கள் சிக்கினர். அடுத்தடுத்து நிகழ்ந்த 2 குண்டுவெடிப்புகளால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து அங்கு கூடுதல் படைகள் குவிக்கப்பட்டன.
தேவாலயத்துக்கு அருகே உள்ள அனைத்து வீதிகளும் மூடப்பட்டன. சம்பவ இடத்துக்குள் வாகனங்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டன.
இந்த இரட்டை குண்டுவெடிப்பில் சிக்கி 7 பாதுகாப்புபடை வீரர்கள் உள்பட 27 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் படுகாயம் அடைந்த 77 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது.
எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.