அமெரிக்க தேர்தலில் ரஷ்ய தலையீடு விவகாரம் தொடர்பாக பிரபல மாடல் அழகி நாஸ்டியா ரிப்கா கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த 2016 ஆம் ஆண்டுஇடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டிரம்பின் வெற்றிக்காகவும், ஜனநாயக கட்சி வேட்பாளராக நின்ற ஹிலாரி கிளின்டன் தோல்விக்காகவும் ரஷ்யா நேரடியாக தலையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுபற்றி விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. இந்த குற்றச்சாட்டை ரஷ்யாவும், டிரம்பும் பல முறை மறுத்துள்ளனர்.
ஆனால், டிரம்பின் தேர்தல் பிரசாரத்தில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது என்று பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல மொடல் அழகி நாஸ்டியா ரிப்கா கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் அவர் மொஸ்கோ விமான நிலையத்தில் வைத்து ரஷ்ய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக அவர் தாய்லாந்து நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்டது தொடர்பான படத்தை அவரது வக்கீல் டிமிட்ரி ஜாட்சரின்ஸ்கி சமூக வலைத்தளம் ஒன்றில் வெளியிட்டுள்ளார். அவர் இந்த கைது நடவடிக்கையை சர்வதேச ஊழல் என்று விமர்சித்துள்ளார்.
இதற்கிடையே ரஷ்ய உள்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் நாஸ்டியா ரிப்காவும், மேலும் 3 பேரும் விபசாரத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், அதனால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நாஸ்டியா ரிப்காவுக்கும், அவரோடு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள 3 பேருக்கும் அதிகபட்சம் 6 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.