10 வீத இட ஒதுக்கீடு மசோதா அரசியல் நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டுள்ளது என்று தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
“பொருளாதார அடிப்படையிலான இந்த இடஒதுக்கீட்டை தி.மு.க. எதிர்க்கிறது. தொடர்ந்து இது தான் தி.மு.க.வின் நிலைப்பாடு. இதை தேர்தலுக்காக, அரசியல் நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்ட இடஒதுக்கீடு.
பத்து சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மாநிலங்களவையில் இருந்து அ.தி.மு.க. வெளியேறாமல் வாக்களித்திருக்கலாம். வாக்களிக்கவில்லை என்று வெளியேறியது இன்னொரு கண்துடைப்பு நாடகம். பா.ஜ.க.வின் ஆணைக்கிணங்க அவர்கள் செயல்பட்டிருக்கிறார்கள்.
தொடர்ந்து இந்தியை திணிக்கும் வகையில் பாஜகவின் நடவடிக்கைகள் உள்ளது. அனைத்து மாநிலத்தவரும் இப்போது தான் தங்களின் தனித்தன்மையை உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.
திராவிட இயக்கம் கூறிய கருத்துக்களின் முக்கியத்துவத்தை அவர்கள் இப்போது தான் புரிந்து கொள்ள தொடங்கியிருக்கிறார்கள். எனவே நிச்சயமாக பல மாநிலங்கள் இதனை ஏற்றுக்கொள்ளாது,” என்றார்.