உலகம்

காதல் வலையில் சிக்கிய மலேசிய மன்னர் சுல்தான் முஹம்மது முடிதுறந்தார்

ரஷ்யா நாட்டு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டதாக கிசுகிசுக்கப்பட்ட மலேசியா நாட்டின் மன்னர் ஐந்தாம் முஹம்மது இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.


தென்கிழக்காசிய கண்டத்தில் அமைந்துள்ள மலேசியா நாட்டில் மன்னரின் முடியாட்சியின்கீழ் கூட்டாட்சி முறையிலான அரசியல் சட்டம் அமுலில் உள்ளது.
அந்நாட்டின் பதினைந்தாம் மன்னராக பொறுப்பு வகிக்கும் சுல்தான் முஹம்மது(49) தலைமையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மகாதீர் பின் முகம்மது, துணைப் பிரதமர் வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோர் அந்நாட்டின் ஆட்சியை நடத்தி, நிர்வகித்து வருகின்றனர்.

மலேசியா மன்னராக கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதவியேற்ற சுல்தான் முஹம்மது ‘மன்னர் ஐந்தாம் முஹம்மது’ என்று அந்நாட்டவர்களால் குறிப்பிடப்படுகிறார்.


உடல்நலக்குறைவுக்காக சிகிச்சை மேற்கொள்ளப் போவதாக கூறி கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மன்னர் விடுப்பு எடுத்திருந்தார். அதன் பின்னர், ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் ‘மாஸ்கோ அழகி’ பட்டம் பெற்ற இரு பெண்ணை அவர் காதலித்து திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகின.

ஆனால், இந்த வதந்திகள் தொடர்பாக மன்னரின் அரண்மனை வட்டாரங்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில், மலேசியாவில் உள்ள இஸ்லாமிய மத தலைவர்கள் சமீபத்தில் ஒன்றுகூடி மன்னரைப்பற்றி வெளியான தகவல்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.


இந்நிலையில், மன்னர் ஐந்தாம் முஹம்மது இன்று தனது பதவியை ராஜினாமா செய்ததாக மலேசியா நாட்டு மன்னர் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அவரது பதவி விலகலுக்கான காரணம் தொடர்பாக அந்த அறிவிப்பில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.
‘மாஸ்கோ அழகி’ தொடர்பாக முன்னர் வெளியான தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ராஜினாமா அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.

பல்லாயிரம் ஆண்டுகாலமாக இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சிக்குட்பட்டு இருந்துவரும் மலேசியாவில் 9 மாநிலங்கள் உள்ளன.
இந்த மாநிலங்களை சேர்ந்த ஆட்சியாளர்கள் சுழற்சி முறையில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்பட்டு மன்னராக முடிசூட்டப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles