உலகம்

டோனியை விட ரிஷப் பந்த் அதிக சதங்களை அடிப்பார் : ரிக்கி பொண்டிங்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் டோனியைவிட ரிஷப் பந்த் அதிக சதங்கள் விளாசுவார் என்று ரிக்கி பொண்டிங் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா – இந்தியா இடையிலான 4 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது.


நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டம் செய்த இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 622 ஓட்டங்களை குவித்து ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 189 பந்தில் 15 பவுண்டரி, 1 சிக்சருடன் 159 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேற்கிந்தியத்தீவுகள் அணிககு எதிராக இரண்டு முறை 92 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த ரிஷப் பந்த், இந்த போட்டியில் அசத்தினார்.

இரண்டு சதங்கள் விளாசியுள்ள ரிஷப் பந்த் டெஸ்ட் போட்டியில் டோனியை விட அதிக சதங்கள் விளாசுவார் என்று ரிக்கி பொண்டிங் தெரிவித்துள்ளார்.

ரிஷப் பந்த் குறித்து ரிக்கி பொண்டிங் கூறுகையில்,

‘‘ரிஷப் பந்த் உண்மையிலேயே திறமைசாலி. மேலும் நம்பமுடியாத வகையில் சிறந்த பால் ஸ்டிரைக்கர். சிறந்த கிரிக்கெட் அறிவை பெற்றுள்ளார்.

சில சமயங்களில் அவர் சுழற்பந்து வீச்சிற்கு எதிராக விளையாடுவதை உங்களால் நினைத்துக்கூட பார்க்க இயலாது. அவருக்கு நான் பயிற்சியாளராக இருந்தது அதிர்ஷ்டம். ரிஷப் பந்த் அபாயகரமான டி-20 வீரர்.

சிட்னி சதத்துடன் இரண்டு சதங்களும், இரண்டு முறை 90 ஓட்டங்களுக்கு மேலும் விளாசியுள்ளார். தற்போது ரிஷப் பந்திற்கு 21 வயதே ஆவதால், மூன்று வகை கிரிக்கெட்டிலும் இந்தியாவிற்காக நீண்ட நாட்கள் விளையாட முடியும்.

தற்போது வரை விக்கெட் கீப்பர் பணியில் ஓரளவிற்கு தேர்ச்சி பெற்றுள்ளார். இன்னும் நன்றாக தேர்ச்சி பெற வேண்டும். அவரால் சிறந்த விக்கெட் கீப்பராக முடியும். அதேபோல் சிறந்த பேட்ஸ்மேனாகவும் ஆக முடியும்.

இந்திய கிரிக்கெட்டில் டோனி ஏற்படுத்திய தாக்கத்தை நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். டோனி ஏராளமான டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார். ஆனால் 6 சதங்கள் மட்டுமே அடித்து்ளளார். டோனியை விட ரிஷப் பந்த் அதிக சதம் அடிப்பார்’’ என்றார்.

Hot Topics

Related Articles