இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் 15 பந்துகளில் 6 விக்கெட்டுக்களை கைப்பற்றி இலங்கை அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.
நியூஸிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி நியூஸிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
இதில் முதலாவதாக இடம்பெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சமநிலையில் முடிந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் கிறைஸ்ட்சேர்சில் ஆரம்பமானது.
இப் போட்டியில் முதலில் களமிறங்கி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸுக்காக 178 ஓட்டங்களை பெற்றது.
இதையடுத்து களமிறங்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுக்களை இழந்து 88 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இந் நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று ஆரம்பித்த இலங்கை அணிக்கு நியூஸிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.
அதன்படி அவர் 15 பந்துகளை வீசி 6 விக்கெட்டுக்களை பதம் பார்த்தார். இவரின் பந்து வீச்சில் சிக்கிய ரோஷான் சில்வா 21 ஓட்டத்துடனும், நிரோஷன் டிக்வெல்ல 4 ஓட்டத்துடனும், தில்றூவான் பெரேரா, சுரங்க லக்மால், துஷ்மந்த சாமர, லஹிரு குமார ஆகியோர் எதுவித ஓட்டங்களின்றியும் ஆட்டமிழந்தனர்.
இதனால் இலங்கை அணி 104 ஓட்டத்துக்குள் பரிதாபகரமாக சுருண்டது.