உலகம்

தமிழக, கர்நாடக முதல்வர்களின் கூட்டத்தைக்கூட்ட மத்திய அரசிற்கு அதிகாரமில்லை -அன்புமணி ரமதாஸ்

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநில முதல்வர்களின் கூட்டத்தை கூட்ட மத்திய அரசிற்கு அதிகாரமில்லை என்று பா ம கவின் இளைஞரணி தலைவரான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் புதிய அணை கட்டும் சிக்கலுக்கு தீர்வு காண தமிழ்நாடு – கர்நாடக முதல்வர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

இந்த செய்தி உண்மையாக இருந்தால் மத்திய அரசின் நிலைப்பாடு ஒருதலைப்பட்சமானது மட்டுமின்றி கண்டிக்கத்தக்கதும் ஆகும். மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை கர்நாடக முதல்வர் குமாரசாமி டெல்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.

அப்போது மேகேதாட்டு அணையைக் கட்ட உதவி செய்யும்படி குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார். அதை ஏற்றுக்கொண்டு தான் இரு மாநில முதல்வர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று நிதின் கட்கரி உறுதியளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

உண்மையில் மேகேதாட்டு அணை விவகாரத்தில் இரு மாநில முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசுக்கு அதிகாரமில்லை. மத்திய அரசு என்பது தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் பொதுவானது ஆகும். இரு மாநில மக்களின் நலன்களையும் பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய அரசுக்கு உள்ளது. அவ்வாறு இருக்கும்போது, இரு மாநில அரசுகளும் கோரிக்கை விடுக்காத நிலையில், எந்தப் பிரச்சினை குறித்தும், எந்த மாநிலத்தையும் கட்டாயப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்த அழைக்க முடியாது.

மேகேதாட்டு அணை தொடர்பாக பேச்சுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கர்நாடகம் மட்டுமே கோரியிருக்கிறது. தமிழகத்தின் சார்பில் அத்தகைய கோரிக்கை முன்வைக்கப்படாத நிலையில் தமிழகத்தைப் பேச்சுக்கு அழைக்க முடியாது.

அவ்வாறு செய்தால் அது மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதாக அமைந்துவிடும். இந்த உண்மைகள் மத்திய அரசுக்கு நன்றாகத் தெரியும் என்றாலும், மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு ஆதரவாக தமிழகத்திற்கு மத்திய அரசு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது.

மேகேதாட்டு குறித்து கர்நாடக அரசு எந்த அனுமதி கோரினாலும் அதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்காவிட்டால், அக்கோரிக்கையை மத்திய அரசு ஏற்கக்கூடாது. ஆனால், மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கத் தேவையான ஆய்வுகளை மேற்கொள்ள கர்நாடகத்துக்கு தன்னிச்சையாக அனுமதி அளித்த மத்திய அரசு, இப்போது அணைக்கான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள அனுமதி கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறது.

அதற்காகவே இரு மாநில முதல்வர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு துடிக்கிறது. மேகேதாட்டு அணை கட்டுவதால் கர்நாடகத்தை விட தமிழகத்துக்கு தான் கூடுதல் நன்மை என்பதால், அதை தமிழக அரசிடம் எடுத்துக் கூறி ஒப்புதலைப் பெற்றுத் தர உதவும்படி குமாரசாமி கோரியதன் அடிப்படையில் தான் முதல்வர்கள் கூட்டத்தை நடத்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சம்மதித்துள்ளார். இதிலிருந்தே இந்தக் கூட்டத்தின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

எனவே, மத்திய அரசே அழைத்தாலும் மேகேதாட்டு அணை குறித்த எந்த பேச்சிலும் தமிழக அரசு கலந்து கொள்ளக் கூடாது.” என்று அந்த அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

Hot Topics

Related Articles