உலகம்

சண் குகவரதனை கட்சியிலிருந்து இடை நிறுத்தியது ஜனநாயக மக்கள் முன்னணி

மேல் மாகாண சபை உறுப்பினர் சண் குகவரதனை கட்சியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.


இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ் ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முறையில் சமூகத்தில் நடந்துகொண்டமை, கட்சி ஒழுங்கு விதிகளை மீறியுள்ளமை ஆகிய காரணங்களுக்காக மேல்மாகாணசபை உறுப்பினர் சண்முகநாதன் குகவரதன், கட்சியின் அடிப்படை அங்கத்துவத்திலிருந்தும், சகல பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் இடை நிறுத்தப்பட்டுள்ளார்.

சண்முகநாதன் குகவரதன் வகித்து வந்த, கட்சியின் உபதலைவர் பதவிக்கு, கொழும்பு மாநகரசபை உறுப்பினர் சின்னத்தம்பி பாஸ்கரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த இரண்டு நடவடிக்கைகளையும் அடுத்த வாரம் கூடும் கட்சியின் அரசியல் குழு பரிசீலித்து இறுதி முடிவை எடுக்கும் என ஜனநாயக மக்கள் முன்னணி ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல் மாகாண சபை உறுப்பினர் சண் குகவரதன் 7 கோடி ரூபா காசோலை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles