கணனிகளை கண்காணிக்கும் உத்தரவால் இந்திய ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ?

இந்தியாவில் உள்ள எந்தவொரு கணினியிலும் பாதுகாத்துவைக்கப்பட்டிருக்கும் தகவல்கள், பரிமாறப்படும் தகவல்கள், அனுப்பப்படும் தகவல்களைக் கண்காணிப்பதற்கும் அந்த தகவல்களை இடைமறித்து ஆய்வுசெய்வதற்கும் தகவலின் உண்மைத்தன்மையை ஆராய்வதற்கும் புலனாய்வுச் சேவை, சட்டத்தை அமுல்படுத்தும் பிரிவுகள் உட்பட மத்திய அரசின் பத்து விசாரணை முகமைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சு அதிகாரம் அளித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. பிரஜையொருவரின் அந்தரங்கத்துக்கான உரிமை மீது இந்த உத்தரவு ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து பெரிய விவாதம் இதனால் மூண்டிருக்கிறது.

உத்தரவை கொடூரமானது என்றும் மிகவும் ஆபத்தானது என்றும் கடுமையாகச் சாடியிருக்கும் எதிர்க்கட்சிகள் இந்தியாவை இது ஒரு ” கண்காணிப்பு அரசாக” மாற்றுகிறது என்று சுட்டிக்காட்டியிருக்கின்றன. அரசின் விசாரணை முகமைகள் பயங்கரவாதிகள் மீதும் அவர்களது சட்டவிரோத செயற்பாடுகள் மீதும் எப்போது கண்காணிப்பை மேற்கொள்ள உத்தரவு உதவுமென்பதால் அது தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு முக்கியமானது என்று பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் கூறியிருக்கிறது.

மேலும், 2000 ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப சட்டத்துக்கு ஒரு தசாப்தகாலத்துக்கு முனனர் கொண்டுவரப்பட்டிருந்த திருத்தங்களிலேயே மத்திய உள்துறை அமைச்சின் உத்தரவின் தோற்றுவாய் இருக்கிறது என்றும் அரசாங்கம் சுட்டிக்காட்டியிருக்கிறது.இவ்வாறு கூறுவதன் மூலமாக தனக்கு எதிராக இது விடயத்தில் வருகின்ற கண்டனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் பக்கமாக திருப்பிவிட மோடி அரசாங்கம் முயற்சிக்கிறது. அதில் ஓரளவு சரி இருக்கவே செய்கிறது.

தகவல் தொழில்நுட்ப சட்டத்துக்கான திருத்தங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போதே கொண்டுவரப்பட்டன. உண்யமயில், எந்த விதமான விவாதமுமின்றி பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் ஏகமனதாகவே அநநத திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டன.பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற சகல அரசியல் கட்சிகளுமே திருத்தங்களை முழுமையாக ஆதரித்தன என்பதே அதன் அர்த்தம்.அதனால், அந்தரங்கத்தைப் பேணுவதற்கு இந்தியப் பிரஜைகளுக்கு இருக்கின்ற உரிமையை அவமதிக்கின்ற குற்றப்பொறுப்பில் இருந்து எந்த அரசியல் கட்சியும் தப்பிவிடமுடியாது.

அது அவ்வாறிருக்க, மோடி அரசாங்கத்தின் உத்தரவு குறித்து ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதற்கு நிறையவே காரணங்கள் இருக்கின்றன.2009 ஆண்டின் சட்டங்களின் கீழ் மத்திய அரசின் விசாரணை முகமையொன்று கண்காணிப்பை மேற்கொள்வதென்றால், ஒவ்வொரு தனித்தனி விவகாரதுக்கும் உள்துறைச் செயலாளரின் அனுமதியைக் கேட்கவேண்டியிருந்தது. அந்த விண்ணப்பத்துக்கான காரணங்களை விபரமாக எழுத்தில் கொடுக்கவும் வேண்டியிருந்தது.

அதை நிராகரிப்பதற்கு அல்லது அனுமதிப்பதற்கு உள்துறைச் செயலாளருக்கு சுயாதீனமான அதிகாரம் இருந்தது.ஆனால், இப்போது புதிய உத்தரவு பத்து விசாரணை முகமைகளுக்கும் தளையேதுமற்ற தற்துணிபு அதிகாரத்தைக் கொடுக்கிறது. அதன் வீச்சு மிகவும் பரந்ததாக இருக்கிறது.கடந்த காலத்தில் உள்துறை அமைச்சு மாத்திரமே மக்களின் தொலைபேசி அழைப்புக்களையும் மின்னஞ்சல்களையும் நுணுகி ஆராய்ந்து பார்க்க முடியுமாக இருந்தது என்றால், இப்போது பத்து விசாரணை முகமைகளினாலும் அவ்வாறு செய்யமுடியும்.

தொலைபேசி அழைப்புக்களுக்கும் மின்னஞ்சல்களுக்கும் மேலதிகமாக, இந்த முகமைகள் கணினியொன்றின் தரவுகளை இடைமறிப்பதற்கும் கருவியை பறிமுதல் செய்வதற்குமான அதிகாரத்தையும் கொண்டுள்ளன.கண்காணிப்பதற்கான இந்த மிகவும் பரந்தளவிலான இந்த ஆணையை மோடி அரசாங்கத்தின் எதேச்சாதிகாரப் போக்கையும் சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையையும் அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது மிகவும் கவலைப்படவேண்டியிருக்கிறது.

மோடி அரசாங்கம் அதன் எதிர்ப்பாளர்களை தேசவிரோதிகள் என்றும் துரோகிகள் எனறும் நாமகரணஞ்சூட்டுகிறது.அவர்களை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறவர்கள் என்றும் குற்றஞ்சாட்டுகிறது. அரசாங்கத்தை விமர்சிக்கும் ஒவ்வொருவரும் உண்மையில் ஒவ்வொரு இந்தியப் பிரஜையும் இந்து கண்காணிப்பு உத்தரவினால் பாதிக்கப்படும் நிலையில் இருக்கிறார்.மேலும் மோசமானது என்னவென்றால், கணினிகளுக்குள் நுழைவதற்கான அதிகாரம் சேகரிக்கப்பட்டிருக்கக்கூடிய தரவுகளை அதிகாரிகள் திரிபுபடுத்துவதற்கும் அரசாங்கத்தை விமர்சிப்பவர்களுக்கும் அரசியல் எதிரிகளுக்கும் எதிராக வேண்டுமென்றே வழக்குகளை சோடிப்பதற்கும் வசதியாக அமைந்துவிடக்கூடிய அபாயம் இருக்கிறது.

முன்னென்றும் இல்லாத மட்டத்துக்கு கண்காணிப்பை அனுமதிக்கும் கடந்த வாரத்தைய உத்தரவு அந்தரங்கத்துக்கான உரிமையை அடிப்படை உரிமைகளில் ஒன்று என்று அங்கீகரித்து இந்திய உச்சநீதிமன்றம் வழங்கிய 2017 தீர்ப்புக்கு எதிரானதாக இருக்கிறது.பெருவாரியான விசாரணை முகமைகளுக்கு வழங்கப்படுகின்ற மிகவும் பரந்தளவிலான கண்காணிப்பு ஆணை நிறுவனரீதியான மேற்பார்வைக்கு ஆட்படாத முறையில் தாறுமாறாகப் பயன்படுத்தப்படுமாக இருந்தால் இந்திய ஜனநாயகத்துக்கு அது ஒரு பெரிய அச்சுறுத்தலாக அமையும்.

Author: superadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *